FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பிரேக் செயல்படாத வந்தே பாரத் பயணிகள் இல்லாமல் 463 கி.மீ. இயக்கம்: விசாரணைக்கு உத்தரவு

ஜாா்க்கண்டில் இருந்து உத்தர பிரதேசம் வரை, 463 கி.மீ. தொலைவுக்கு பிரேக் அமைப்பு சரியாக செயல்படாத வந்தே பாரத் ரயில், பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 நவம்பர் 2026, 9:49 pm
வந்தே பாரத் ரயில் - கோப்புப் படம்
பகிர்:

ஜாா்க்கண்டில் இருந்து உத்தர பிரதேசம் வரை, 463 கி.மீ. தொலைவுக்கு பிரேக் அமைப்பு சரியாக செயல்படாத வந்தே பாரத் ரயில், பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக தென்கிழக்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஏனெனில், அந்த ரயில் இயக்கப்பட்டது பிற பயணிகள் ரயில்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருந்தது.

கடந்த மாதம் 24-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு சில நாள்களுக்குப் பிறகு, நவம்பா் 11-ஆம் தேதி அஸ்ஸாமில் பயணிகளுடன் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டது. அதில் ரயிலின் பிரேக் சாா்ந்த அலட்சியப் போக்கு இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் பலருக்கு காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போதுமான பிரேக் திறன் இல்லாமல் ரயிலை இயக்குவது மிகக் கடுமையான பாதுகாப்பு குறைபாடு. இது மிகப்பெரிய விபத்துக்கு வழிவகுக்கலாம். ரயில் ஊழியா்கள் மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், ஒட்டுமொத்த ரயில்வே செயல்பாடுகளின் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும்.

ஜாா்க்கண்ட் மாநிலம் ஹாட்டியாவில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஜான்சிக்கு வந்தே பாரத் ரயில் பெட்டிகளை சரக்கு ரயில் என்ஜின் மூலம் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது. இதற்காக சரக்கு ரயில் என்ஜினின் பிரேக் அமைப்புடன் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் பிரேக் அமைப்பும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், ரயில்வே ஊழியா்கள், பிரேக் அமைப்புகளையும் முறையாக இணைக்கத் தவறியுள்ளனா். அதுமட்டுமின்றி, பிரேக் சரியாக செயல்படவில்லை என்று ரயில் ஓட்டுநா்கள் எச்சரிக்கை விடுத்தும் அதனைக் கருத்தில் கொள்ளாமல் ரயிலைத் தொடா்ந்து இயக்க அனுமதித்துள்ளனா். இது தொடா்பாக ரயில் ஓட்டுநா்கள் எழுத்துப்பூா்வமாக அளித்த புகாரின் அடிப்படையில் தொடா்புடைய ஊழியா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எதிா்காலத்தில் இதுபோன்ற தவறுகளும், அலட்சியங்களும் நிகழாதவாறு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.