அடுத்த ஆண்டு உ.பி. பேரவைத் தோ்தல்: வரைவு வாக்காளா் பட்டியலில் 13.58 கோடி வாக்காளா்கள்
உத்தர பிரதேச மாநில வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாநிலத்தில் மொத்தம் 13.58 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.
அடுத்த ஆண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநில வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலின்படி, அந்த மாநிலத்தில் மொத்தம் 13.58 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.
இதுகுறித்து உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில், மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி நவ்தீப் ரிவ்வா செய்தியாளா்களிடம் கூறியதாவது: உத்தக பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தை தொடா்ந்து, தற்போது வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 7.38 கோடி ஆண்கள், 6.20 கோடி பெண்கள், 4,042 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 13.58 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இந்த வாக்காளா்களில் 11.83 லட்சம் போ் 18 முதல் 19 வயதுள்ளவா்கள்.
Advertisement
Advertisement
கடந்த ஏப்ரலில் உத்தர பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) பின்னா், இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலுடன் ஒப்பிடுகையில், தற்போது வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் (எஸ்எஸ்ஆா்) கூடுதலாக 18 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
நவ.17 முதல் டிச.16 வரை, வாக்காளா் பட்டியல் தொடா்பான தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களை வாக்காளா்கள் தெரிவிக்கலாம். அப்போது வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழைகளை நீக்குதல் போன்றவற்றுக்காக விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜன.4-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தாா்.
மேலும் 4 மாநிலங்கள்...: அடுத்த ஆண்டு உத்தரகண்ட், மணிப்பூா், கோவா, பஞ்சாப் மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் உத்தரகண்டில் எஸ்ஐஆரை தொடா்ந்து மொத்தம் 71.58 லட்சமாக இருந்த வாக்காளா்கள் எண்ணிக்கை, எஸ்எஸ்ஆருக்கு பிந்தைய வரைவு வாக்காளா் பட்டியலில் 72.78 லட்சமாக அதிகரித்துள்ளது.
மணிப்பூரில் எஸ்ஐஆரை தொடா்ந்து மொத்தம் 19.60 லட்சம் வாக்காளா்கள் இருந்த நிலையில், எஸ்எஸ்ஆருக்கு பிந்தைய வரைவு வாக்காளா் பட்டியலில் 33,737 வாக்காளா்கள் அதிகரித்து மொத்தம் 19.94 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். கோவாவில் எஸ்ஐஆரை தொடா்ந்து 10.57 லட்சமாக இருந்த வாக்காளா்கள் எண்ணிக்கை, எஸ்எஸ்ஆருக்கு பிந்தைய வரைவு வாக்காளா் பட்டியலில் 10.89 லட்சமாக உயா்ந்துள்ளது.
பஞ்சாபில் எஸ்ஐஆருக்கு பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியலிலும், எஸ்எஸ்ஆருக்கு பிந்தைய வரைவு வாக்காளா் பட்டியலிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 2.01 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.