'அக்வான்' புயல்: ஒடிசா மாநிலத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
ஒடிசா மாநிலத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறித்து...
வங்கக் கடலில் 'அக்வான்' புயல் நரசப்பூர் - புரி இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மல்கங்கிரி மற்றும் பிற தெற்கு மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கஞ்சாம், கஜபதி, ராயகடா, கந்தமால், மல்கங்கிரி மற்றும் கோராபுட் ஆகிய ஆறு பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள கிராமங்கள், குடியிருப்புகள் மற்றும் சாலைப் பகுதிகளைக் கண்டறிந்து வரைபடமாக்குமாறு சிறப்பு நிவாரண ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
மேலும், ஆபத்தான இடங்களை நேரில் ஆய்வு செய்து, தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை வெளியேற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, அக்வான் புயல் தீவிரமடைந்து 'மிகத் தீவிர புயலாக'மாறி, வெள்ளிக்கிழமையன்று ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் தெற்கு மாவட்டங்களில் பலத்த மழையும், பலமான காற்றும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசு, ஒடிசா பேரிடர் விரைவுப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட 74 மீட்புக் குழுக்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அக்வான் புயல் நெல்லூர் - விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் அக்வான் புயல்,
சென்னைக்கு கிழக்கே சுமார் 570 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கு-தென்கிழக்கே 580 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும், திருகோணமலைக்கு வடகிழக்கே 660 கி.மீ தொலைவிலும், கோபால்பூருக்கு தெற்கே 710 கி.மீ தொலைவிலும் மற்றும் புரிக்கு தெற்கே 770 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.