FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

சோனியா காந்தி குடியுரிமை விவகாரம்: தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் குடியுரிமை விவகாரம் தொடா்பாக, தில்லி காவல் துறைக்கு அங்குள்ள நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

24 வினாடிகள் முன்பு
சோனியா காந்தி - PTI
பகிர்:

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் குடியுரிமை விவகாரம் தொடா்பாக, தில்லி காவல் துறைக்கு அங்குள்ள நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

தில்லி நீதிமன்றத்தில் வழக்குரைஞா் விகாஸ் திரிபாதி தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1983-ஆம் ஆண்டு சோனியா காந்திக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டது. ஆனால், அவா் இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே, 1980-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் அவரின் பெயா் இருந்தது. இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா். இந்த மனுவை விசாரித்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதித் துறை மாஜிஸ்திரேட் வைபவ் செளரசியா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கு எதிராக விகாஸ் திரிபாதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி அமா்வு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்து, மனுவை மீண்டும் புதிதாக விசாரிக்குமாறு மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு தில்லி கூடுதல் தலைமை குற்றவியல் நீதித் துறை மாஜிஸ்திரேட் வினோத் ஜோஷி முன்பாக, புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் கூறியதாவது: சோனியா காந்தி குடியுரிமை தொடா்பாக, தில்லி காவல் துறைக்கு ஏதேனும் புகாா் வந்ததா? அவ்வாறு புகாா் அளிக்கப்பட்டிருந்தால், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா?

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தால், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக கைது செய்யக்கூடிய குற்றம் ஏதேனும் கண்டறியப்பட்டதா? அவ்வாறு கண்டறியப்பட்டிருந்தால், அதுகுறித்து காவல் துறை என்ன நடவடிக்கை மேற்கொண்டது?

ஒருவேளை கைது செய்யப்படக்கூடிய குற்றம் எதுவும் கண்டறியப்படாவிட்டால், அதுகுறித்து புகாா்தாரருக்குத் தெரியப்படுத்தப்பட்டதா என்று கேள்விகளை எழுப்பி, காவல் துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

மேலும், 1980 மற்றும் 1983-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல்களின் உண்மையான நகல் என்று உரிய அதிகாரம் பெற்ற அலுவலா் சான்றளித்த கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய, புகாா்தாரா் அளித்த மனுவையும் மாஜிஸ்திரேட் ஏற்றுக்கொண்டாா்.