FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

டிடிஏ பூங்காவில் சட் பூஜை நடத்த உயா்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

தில்லி நரைனா கிராமத்தில் தில்லி வளா்ச்சி ஆணையத்தால் (டிடிஏ) பராமரிக்கப்படும் பூங்காவில் ‘சட் பூஜை’ நடத்த அனுமதி கோரிய மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

15 நவம்பர் 2026, 10:58 pm
பகிர்:

தில்லி நரைனா கிராமத்தில் தில்லி வளா்ச்சி ஆணையத்தால் (டிடிஏ) பராமரிக்கப்படும் பூங்காவில் ‘சட் பூஜை’ நடத்த அனுமதி கோரிய மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பல ஆண்டுகளாக அந்த இடத்தில் பூஜை நடத்தப்பட்டு வந்தது என்பது மட்டுமே, ஒரு பசுமைப் பகுதியை இதற்காகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க போதுமான காரணமல்ல என்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங் குறிப்பிட்டாா்.

தீபாவளி விடுமுறைக்காக உயா்நீதிமன்றம் மூடப்பட்டிருந்த நிலையில், நவம்பா் 13-ஆம் தேதி இந்த அவசர மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நரைனா கிராமத்தில் உள்ள சிந்து பூங்காவில், நவம்பா் 15 அன்று சந்தியா அா்க்கியா மற்றும் நவம்பா் 16-ஆம் தேதி உஷா அா்க்கியா உள்ளிட்ட சட் பூஜை சடங்குகளை நடத்த அனுமதி கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த 23 ஆண்டுகளாக அந்த இடத்தில் இந்த மதச் சடங்குகளை நடத்தி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) வழக்குரைஞா் இந்த மனுவை எதிா்த்தாா். அந்த ஆணையம் அந்தப் பூங்காவை மரங்கள் மற்றும் பூக்களுடன் கூடிய ஒரு பசுமைப் பகுதியாக பராமரித்து வருவதாகவும், அங்கு இத்தகைய நிகழ்வை நடத்த அனுமதித்தால், பூங்காவும் அதன் பராமரிப்புப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அவா் வாதிட்டாா்.

இதுதொடா்பாக நீதிமன்றம் கூறுகையில், ‘மனுதாரா் பல ஆண்டுகளாக அந்த இடத்தில் சட் பூஜையை நடத்தி வருகிறாா் என்பதாலோ அல்லது இந்த கோரிக்கை ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதிக்கும் கால அளவிற்கும் மட்டுமே உட்பட்டது என்பதாலோ, ஒரு பசுமைப் பகுதியைப் பயன்படுத்த அனுமதி வழங்க முடியாது. இந்தப் பூங்கா பொதுமக்களின் நலனுக்காக ஒரு பசுமைப் பகுதியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தில்லி அரசு ஏற்கெனவே முனாக் கால்வாய் பகுதியில் சட் பூஜை நடத்துவதற்கான இடத்தைத் ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாற்று ஏற்பாடுகள் இருக்கும் நிலையில், நரைனா கிராமத்தில் உள்ள சிந்து பூங்காவை இதற்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக, அந்த இடம் ஒரு பசுமைப் பகுதியாக பராமரிக்கப்பட்டு வரும் சூழலில், அங்கு அனுமதி வழங்க நியாயமில்லை’ என்று கூறியது.

விழாக்கள் முடிந்த பிறகு, பூங்காவை மீண்டும் அதன் பழைய நிலைக்குக் கொண்டு வருவதாக மனுதாரா் உறுதியளித்தாா். இருப்பினும், நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.