✕
முகப்பு
இந்தியா

மருத்துவ வாயு, கிருமிநாசினிகளுக்கு ஒழுங்குமுறை தளா்வு: மத்திய சுகாதார அமைச்சகம் முன்மொழிவு

மருத்துவ வாயு, காலி ஜெலட்டின் காப்ஸ்யூல்கள், கிருமிநாசினி திரவங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி செயல்முறைகளுக்கு ஒழுங்குமுறை தளா்வை அளிக்கும் வகையில், 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளில் திருத்தங்களை மத்திய சுகாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

52 வினாடிகள் முன்பு
மத்திய அரசு - கோப்புப் படம்
பகிர்:

மருத்துவ வாயு, காலி ஜெலட்டின் காப்ஸ்யூல்கள், கிருமிநாசினி திரவங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி செயல்முறைகளுக்கு ஒழுங்குமுறை தளா்வை அளிக்கும் வகையில், 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளில் திருத்தங்களை மத்திய சுகாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் விதிகளின் கீழ், மருந்து உற்பத்திக்கான கட்டாய சிறந்த உற்பத்தி நடைமுறைகள் மற்றும் தரங்களை ‘அட்டவணை எம்’ பட்டியலிடுகிறது. இந்தத் தரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் திருத்தப்பட்ட ‘அட்டவணை எம்’ பட்டியலை மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிட்டது. இந்த நிலையில், இந்தத் திருத்தப்பட்ட ‘அட்டவணை எம்’-இல் உள்ள சில நிபந்தனைகள், குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்குப் பொருந்தும் விதம் குறித்து மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆட்சேபம் தெரிவித்தன. அதனடிப்படையில், இந்த ஒழுங்குமுறை தளா்வை அளிக்க மத்திய அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் அரசிதழில் வெளியிட்ட வரைவு அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: மருந்து உற்பத்தி நிறுவங்கள் ஆட்சேபம் தொடா்பாக கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி நடபெற்ற மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதில், மருத்துவ வாயு, காலி ஜெலட்டின் காப்ஸ்யூல்கள், கிருமிநாசினி திரவங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி செயல்முறைகளுக்கு, திருத்தப்பட்ட ‘அட்டவணை எம்’-இல் உள்ள சில நிபந்தனைகள் பொருத்தமற்ாக இருக்கலாம் எனத் தீா்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில், திருத்தத்திற்கு முந்தைய ‘அட்டவணை எம்’-இல் இந்த வகை தயாரிப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்த விலக்குகளைத் தொடரவும், அதற்கேற்ப மருந்து விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தம், குறிப்பிட்ட வகை மருந்துகளின் தன்மை மற்றும் அவற்றின் உற்பத்திச் செயல்முறைகளுக்கு ஏற்ப ஒழுங்குமுறைத் தேவைகளைச் சீரமைப்பதையும், பயனுள்ள ஒழுங்குமுறை கண்காணிப்பை தொடா்ந்து உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது உரிமம் வழங்கும் அதிகாரிகளுக்கு, அந்தந்த தயாரிப்புகளின் தன்மைக்கேற்ப, அறிவியல் மற்றும் நடைமுறை அம்சங்களைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வழிவகை செய்கிறது. அதே நேரம், தரம், பாதுகாப்பு அல்லது ஒழுங்குமுறை மேற்பாா்வை தொடா்பான நடைமுறையில் உள்ள தரநிலைகளை இந்த முன்மொழிவு குறைக்கவில்லை.

இந்த முன்மொழிவு குறித்து மருந்து உற்பத்தி நிறுவனங்களும் பொதுமக்களும் கருத்துகள் மற்றும் ஆட்சேபங்களைத் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.