உ.பி.: அங்கன்வாடி பணியாளரின் கவனக்குறைவால் வகுப்பறைக்குள் பூட்டப்பட்ட 5 வயது சிறுவன்!
உத்தர பிரதேசத்தில் அங்கன்வாடி பணியாளரின் கவனக்குறைவால் வகுப்பறைக்குள் பூட்டப்பட்ட 5 வயது சிறுவன் பற்றி....

உத்தரப் பிரதேசத்தில் அங்கன்வாடி பணியாளரின் கவனக்குறைவால் வகுப்பறைக்குள் 5 வயது சிறுவன் பூட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பாலியாவில் உள்ள திர்னாய் மௌலாராய் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர், வியாழக்கிழமை வகுப்பறைக்குள் 5 வயது சிறுவன் இருப்பதைக் கவனிக்காமல் அறையின் கதவைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
அறைக்குள் சிக்கிக்கொண்ட சிறுவன் நீண்ட நேரமாக அழுதபடியே இருந்துள்ளான். அப்போது பள்ளியில் இருந்த தண்ணீர் சுத்திகரிப்பான் அருகே கைகளைக் கழுவச் சென்ற பெண் ஒருவர், சிறுவனின் அழுகுரலைக் கேட்டு கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த கிராம மக்கள் பூட்டை உடைத்து சிறுவனைப் பத்திரமாக மீட்டனர்.
Advertisement
Advertisement
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவன் எப்படி அறைக்குள் பூட்டப்பட்டான் என்று அவர்கள் கேள்வி எழுப்பியதால், பள்ளி நிர்வாகத்தினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், கிராமத் தலைவர் தலையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தினார். இதனிடையே, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நக்ரா மண்டல கல்வி அலுவலர் ரத்ன சங்கர் பாண்டேவுக்கு, மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி மனிஷ் குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை அறிக்கை கிடைத்ததும் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.