பாகிஸ்தான் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: ராகுல் காந்தி திட்டவட்டம்
நமது அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நம்மால் சகித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாது என ராகுல் பேசியிருப்பது குறித்து...
இல்லினாய்ஸ்: எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவை முடிவுக்கு கொண்டும் வரை, அந்த நாட்டுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு சாத்தியமில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தியிடம், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர குற்றச்சாட்டுகளைத் தாண்டி, இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, அப்பாவி மக்கள் கொல்லப்படும் சூழலை நம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
வாய்ப்பு உருவாகலாம்
Advertisement
Advertisement
பயங்கரவாதத்திற்கான ஆதரவை பாகிஸ்தான் நிறுத்தும் நாளில் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான "வாய்ப்பு உருவாகலாம்", ஆனால் அதில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது; அதாவது, நமது நாட்டிற்குள் பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவும், அதை ஊக்குவிக்கும் செயலும்தான் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில், நமது அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நம்மால் சகித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, அதுபோன்ற செயல்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்து பரிசீலிக்க முடியும்," என்று அவர் கூறினார்.
அலட்சியமாக இருக்கக்கூடாது
அமெரிக்க மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றங்களை குறிப்பிட்டு பேசிய ராகுல், சமீபத்திய ஈரான் போர் ஏற்படுவதற்கு முன்பே, இந்தியா ஏற்கனவே ஆழமான கட்டமைப்புச் சிக்கல்களை எதிர்கொண்டு வந்ததாகவும், அந்தப் போர் மக்களின் துயரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல், "உலகில் என்ன நடக்கிறது என்பதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. உலகளாவிய புவிசார் அரசியல் விவகாரங்களில் இருந்து நாம் விலகி இருக்க முடியும் என்று நீங்கள் கருதினால், உங்களுக்குப் பெரிய சிக்கல் காத்திருக்கிறது என்று அர்த்தம்," என்று கூறிய ராகுல், உலகளாவிய புவிசார் அரசியல் விவகாரங்களில் இந்தியா யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாமல், தனது சொந்த நலன்கள் அடிப்படையில் சுதந்திரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சி தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இதனிடையே, ஒரு சில நிறுவனங்களின் கைகளில் "செல்வம் மற்றும் அதிகாரம்" குவிந்திருப்பது, சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு அழிவைச் சந்திப்பது, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு போன்ற மூன்று முக்கிய உள்நாட்டுச் சவால்களை இந்தியா ஏற்கனவே எதிர்கொண்டு வருவதை எங்களால் உணரவும் பார்க்கவும் முடிகிறது. ஈரான் போர் ஒரு பூதக்கண்ணாடியாகச் செயல்பட்டு, மக்களின் துயரத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரம் உள்பட இந்தியா - பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட எந்தவொரு விவகாரம் குறித்தும், மூன்றாம் நபரின் தலையீடின்றி இரு நாடுகளும் பேசித் தீர்வு காண வேண்டும் என்ற கொள்கை முடிவை இந்தியா எப்போதும் வலியுறுத்தி வந்தது. ஆனால், இதற்காக இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் பாகிஸ்தான் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, இல்லினாய்ஸில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியர் ராபர்ட் பேப் என்பவருடன் கலந்துரையாடினார். அதற்கு முந்தைய நாள், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான கல்விசார் கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்றார்.