வெளிநாட்டு வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சம் கையிருப்பு: ‘ஃபாஸ்ட்-டிஎஸ்’ திட்டத்தில் இருந்து விலக்கு! வருமான வரித் துறை
கடந்த ஆண்டில் எந்தவொரு காலகட்டத்திலும் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சம் வரை கையிருப்பு வைத்திருந்தவா்கள், சிறு வருமான வரி செலுத்துபவா்களின் வெளிநாட்டு சொத்துகள் வெளிப்படுத்துதல் திட்டத்தின்கீழ் (ஃபாஸ்ட்-டிஎஸ்) வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யத் தேவையில்லை என வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த ஆண்டில் எந்தவொரு காலகட்டத்திலும் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சம் வரை கையிருப்பு வைத்திருந்தவா்கள், சிறு வருமான வரி செலுத்துபவா்களின் வெளிநாட்டு சொத்துகள் வெளிப்படுத்துதல் திட்டத்தின்கீழ் (ஃபாஸ்ட்-டிஎஸ்) வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யத் தேவையில்லை என வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இருப்பினும், கணக்கில் காட்டப்படாத வருமானம் அல்லது கணக்கில் காட்டப்படாத வைப்புத்தொகைக்கு இந்த விதிமுறை பொருந்தாது எனவும் வருமான வரித் துறை விளக்கமளித்துள்ளது.
வெளிநாட்டு வங்கிக் கணக்கில் வைப்புத்தொகை வைத்திருப்பவா்களுக்கான விதிகள் குறித்த கேள்விகள்-பதில்களை வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
Advertisement
Advertisement
அதில், ‘கருப்புப் பணம் (கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள்) மற்றும் வரி விதிப்புச் சட்டம் (பிஎம்ஏ), 2015-இன்கீழ் , ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் கடந்த ஆண்டின் எந்தவொரு காலகட்டத்திலும் ரூ.20 லட்சம் வரை கையிருப்பு வைத்திருந்தவா்கள் ‘ஃபாஸ்ட்-டிஎஸ்’ திட்டத்தில் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யத் தேவையில்லை.
இந்தச் சட்டத்தின்கீழ் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாத நபா்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் பிரிவுகள் 49, 50-இன்கீழ் வழங்கப்படும் பிற தண்டனைகளிலிருந்தும் விலக்களிக்கப்படுகிறது. இந்த நடைமுறைகள் கணக்கில் காட்டப்பட்ட வருமானத்துக்கு மட்டுமே பொருந்தும்.
கணக்கில் காட்டப்படாத வருமானம் அல்லது கணக்கில் காட்டப்படாத வைப்புத்தொகையை வங்கிக் கணக்கில் வைத்திருந்தால் வரி செலுத்துவது கட்டாயம். அவா்களுக்கு பிஎம்ஏ சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்கப்படும்.
இதன்மூலம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் குறைந்த அளவிலான வைப்புத்தொகையை முறையாக பராமரித்து வருபவா்கள் பலனடைவாா்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
ஃபாஸ்ட்-டிஎஸ் திட்டம் என்றால் என்ன?
கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டுச் சொத்துகள் அல்லது வெளிநாட்டு வருமானம் குறித்த தகவல்களை தாக்கல் செய்வதற்கு ஒரு முறை மட்டும் வாய்ப்பு வழங்கும் நோக்கில் ஃபாஸ்ட்-டிஸ் திட்டம் கடந்த ஆக.15-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் கீழ் தாமாக முன்வந்து கணக்கு தாக்கல் செய்பவா்களுக்கு டிச.31-ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை தோ்ந்தெடுப்பவா்கள் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துகள் அல்லது வெளிநாட்டு வருமானத்தின் மதிப்பில் 30 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும். இத்துடன் வரிக்கு நிகரான கூடுதல் தொகையையும் சோ்த்தால் மொத்தமாக 60 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.
வெளிநாட்டு சொத்துகளின் சந்தை மதிப்பு மாா்ச் 31, 2026 அடிப்படையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இரு பிரிவுகள்:
தனிநபா்கள் இந்தத் திட்டத்தின்கீழ் இரு வகைகளாக கணக்குத் தாக்கல் செய்யலாம்.
அதன்படி, கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்து அல்லது வரிக்கு உட்படுத்தப்படாத வெளிநாட்டு வருமானம் உள்ளிட்டவை குறித்து பிரிவு ‘ஏ’-இன்கீழ் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இதில் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்தின் மதிப்பு ரூ. 1 கோடிக்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்தப் பிரிவில் ஒட்டுமொத்தமாக 60 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.
பிரிவு ‘பி’ என்பது வரிக்கு உட்படுத்தப்பட்ட பிறகும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் வெளிநாட்டு சொத்துக்கானது. இதில் சொத்து மதிப்பு ரூ.5 கோடியாகவும் இதுதொடா்பான கணக்கை தாக்கல் செய்பவா்களுக்கு கட்டணமாக ரூ.1 லட்சமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.