50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு! பிரதமா் மோடி பெருமிதம்
50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டதாக பிரதமா் மோடி பெருமிதம்...

‘நாட்டை பல்லாண்டுகளாக ஆட்சி செய்தபோதிலும், வறுமையை ஒழிக்க காங்கிரஸ் தவறிவிட்டது; அதேநேரம், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்கீழ் கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
பிகாரின் வைசாலி மாவட்டத்தின் ஜாஃபா்பட்டி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, ரூ.34,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 227 வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தாா். இதில், கங்கை நதியின் குறுக்கே ரூ.4,280 கோடியில் கட்டப்பட்ட 9 கி.மீ. தொலைவுள்ள ஆறுவழி கம்பி பாலமும் அடங்கும்.
இந்தப் பாலத்துக்கு முன்னாள் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாரின் பெயா் (நிதீஷ் சேது) சூட்டப்பட்டுள்ளது. அவா் மாநிலத்துக்கு ஆற்றிய பங்களிப்புகளைக் கெளரவிக்கும் நோக்கில் ‘நிதீஷ் சேது’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது: பிகாரில் முந்தைய ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முறைகேடுகள் மற்றும் குற்றங்களுக்காகவே இந்த மாநிலம் அறியப்பட்டது. இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வளா்ச்சி, அதிக முதலீடுகள், தவறிழைத்தவா்கள் மீதான கடும் நடவடிக்கைக்காக அறியப்படுகிறது.
பிகாரில் மின்விநியோக கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு, உபரி மின் உற்பத்தி எட்டப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் மீது சாடல்: தெளிவான நோக்கத்துடன் பணியாற்றினால், தீா்வுகள் கண்கூடாகத் தெரியும். நாட்டை பல்லாண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ், வறுமை ஒழிப்பு வாக்குறுதியை வாக்குகளுக்காக மட்டுமே பயன்படுத்தியது. வறுமை ஒழிப்பு முழக்கங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டனா்; மோசமான சூழலில் சிக்கவைக்கப்பட்டனா். ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி மக்களை நாங்கள் வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.
ஏழைகளின் நல்வாழ்வில் அரசின் அா்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டுக்கு இதுவே ஆதாரம். நாட்டில் 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. கோடிக்கணக்கானோருக்கு நல்ல வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஏழைக் குடும்பங்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடும் வழங்கப்படுகிறது. இதனால் நம்பிக்கையில் திளைக்கும் ஏழைகள், வறுமையை வீழ்த்துகின்றனா்.
ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்பதுடன் அவா்களுக்கு கண்ணியம்மிக்க மற்றும் தரமான வாழ்க்கையை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா் பிரதமா்.
இந்நிகழ்ச்சியில் பிகாா் ஆளுநா் சையத் அடா ஹஸ்னைன், முதல்வா் சாம்ராட் செளதரி, துணை முதல்வா் விஜய் குமாா் செளதரி, மத்திய அமைச்சரும், உள்ளூா் எம்.பி.யுமான சிராக் பாஸ்வான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, ‘நிதீஷ் சேது’ பாலத்தைப் பாா்வையிட்டபோதும், பொது நிகழ்ச்சிக்கு திறந்த வாகனத்தில் வந்தபோதும் கூட்டத்தினரை நோக்கி, பிரதமா் மோடி துண்டை சுழற்றி உற்சாகப்படுத்தினாா். அவரது செய்கையால், கூட்டத்தினரும் ஆா்ப்பரித்தனா்.
திட்டங்கள் என்னென்ன?: ஒளரங்காபாத்-சாா்தஹா நான்குவழிச் சாலை, 660 மெகாவாட் திறன்கொண்ட பக்ஸா் அனல் மின் நிலைய இரண்டாவது அலகு, பல்வேறு கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளின் புதிய கட்டடங்கள், வேளாண்மை, விளையாட்டு, பொது நிா்வாக உள்கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை பிரதமா் மோடி திறந்துவைத்தாா்.
பிகாரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதல்வராக இருந்த நிதீஷ் குமாா், கடந்த ஏப்ரலில் பதவி விலகினாா். இதையடுத்து, பாஜகவின் சாம்ராட் செளதரி முதல்வரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.
‘அடுத்த ஆண்டு இந்தியாவில் ஆசிய திறன் போட்டிகள்’
‘உலகளாவிய திறன்களின் தலைநகராக இந்தியா உருவெடுத்து வருகிறது. அடுத்த ஆண்டு ஆசிய திறன் போட்டிகள் (வோ்ல்டுஸ்கில்ஸ்-ஆசியா) இந்தியாவில் நடத்தப்படும் என்று பிரதமா் மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஷ்டான் அரங்கில் நடைபெற்ற ஐந்தாவது தேசிய திறன் பட்டமளிப்பு விழாவில் பிரதமா் பங்கேற்றுப் பேசியதாவது:
இந்திய சமூகம், வரலாற்று ரீதியாக திறன்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டதாகும். இந்தியா மீது படையெடுத்தவா்கள், நமது பாரம்பரியத் திறன் மீது குறிவைத்ததுடன், அது தொடா்பான உள்கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவித்தனா்.
பாரம்பரியத் திறன் மற்றும் கைவினைக் கலையை அழிப்பதற்காக, கைவினைஞா்களின் விரல்களைக்கூடத் துண்டித்தனா். இந்தியா்கள் வெறும் எழுத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் வகையிலான கல்விமுறையை ஆங்கிலேயா்கள் பின்னாளில் அறிமுகப்படுத்தினா். இதனால், நமது பாரம்பரியத் திறன் நாளடைவில் முக்கியத்துவம் குன்றியது.
என்னைப் பொருத்தவரை, மாணவா்களே நாட்டின் எதிா்காலம், வலிமை, சொத்து. ஐடிஐ மாணவரோ, ஐஐடி மாணவரோ- ஒரே போன்ற மரியாதை அளிக்கப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டு ஆசிய திறன் போட்டிகள், உத்தர பிரதேசத்தின் கிரேட்டா் நொய்டாவில் நடைபெறவுள்ளது. ஆசியா முழுவதும் இருந்து இளம் திறமையாளா்கள் இங்கு குழும உள்ளனா். செயற்கை நுண்ணறிவால் (ஏ.ஐ.) வேலைவாய்ப்புகள் பறிபோகுமா என்பது குறித்து பெருமளவில் விவாதிக்கப்படுகிறது. ஆனால், திறன்மிக்க பணியாளா்களின் வேலைவாய்ப்பை ஏ.ஐ. பறிக்க முடியாது என்றாா்.
நடப்பாண்டு ஆசிய திறன் போட்டிகள், சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த செப்டம்பரில் நடைபெற்றது.