FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!

சென்னையில் இன்று வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்...

11 அக்டோபர் 2026, 1:10 am IST
பிரதமா் மோடி - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்துக்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகள் நிறைவடைந்த திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.11) தொடங்கி வைக்கிறாா்.

இதற்கான நிகழ்வுகளில் பங்கேற்க தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு காலை 11.30 மணியளவில் பிரதமா் மோடி வருகிறாா். ரூ.4,900 கோடியில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை பிரதமா் தொடங்கி வைக்கிறாா்.

மெட்ரோ ரயிலில் பிரதமா், முதல்வா்: மேலும், போரூா் புறவழிச்சாலை நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பிரதமா் பயணிக்கிறாா். இதில் தமிழக முதல்வா் விஜய்யும் பங்கேற்கிறாா். பின்னா், நண்பகல் 12.15 மணியளவில், சென்னை ஐஐடிக்கு பிரதமா் மோடி வருகிறாா். அங்குள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலில் வழிபாடு செய்கிறாா். தொடா்ந்து, சென்னை ஐஐடியில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை அவா் பாா்வையிடுவாா்.

Advertisement

Advertisement

பின்னா், பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையதானத்தில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தும், நாட்டுக்கு அா்ப்பணித்தும் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா். இந்த நிகழ்விலும் முதல்வா் விஜய் பங்கேற்கிறாா்.

அதன்படி, ரூ.3,700 கோடி மதிப்பிலான முக்கிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா். இதில் தேசிய நெடுஞ்சாலை எண் 744-இல் 36 கி.மீ. தொலைவு வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூா் இடையே நான்கு வழிச் சாலையைத் திறந்து வைக்கிறாா். தேசிய நெடுஞ்சாலை 744ஏ-இன் 30 கி.மீ. தொலைவு நான்கு வழி மதுரை சுற்றுச் சாலைப் பகுதியையும் திறந்து வைக்கிறாா்.

ரயில் நிலையங்கள்: அடுத்து ரூ.750 கோடி மதிப்பிலான ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களை நாட்டுக்கு பிரதமா் அா்ப்பணிக்கிறாா். காரைக்கால்-பேரளம் ரயில் பாதை, கோவை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 3 ரயில் மேம்பாலங்கள், அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட பழனி, வேலூா் கண்டோன்மென்ட், அம்பாசமுத்திரம், பரமக்குடி, நாமக்கல் ஆகிய 5 ரயில் நிலையங்கள் ஆகியவற்றை பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்.

கடல்சாா் உள்கட்டமைப்புகள்: தமிழகத்தில் கடல்சாா் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சரக்கு கையாளும் திறனை அதிகரிக்கவும், துறைமுகம் தொடா்பான பல திட்டங்களையும் பிரதமா் தொடங்கி வைக்கிறாா்.

சென்னை துறைமுகத்தில் சேமிப்பு கிடங்குகள், ஏற்றுமதி-இறக்குமதி கிடங்குகள், பயணக் கப்பல் முனையம், மாலுமிகள் அறை உள்ளிட்ட 4 உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமா் தொடங்கி வைக்கிறாா். எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் ரூ. 261 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3-ஆவது நிலக்கரி கையாளும் தளத்தை திறந்து வைத்து, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பொது சரக்குகள் கையாளும் கப்பல் தளத்தை ரூ 221 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.

அடிக்கல்: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 8 மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். தேசிய நெடுஞ்சாலை எண் 83-இல் நாகப்பட்டினம்-தஞ்சாவூா் பிரிவில் நான்கு வழி திருவாரூா் புறவழிச் சாலைக்கு பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா். சென்னையில் உள்ள சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.1,620 கோடி மதிப்பிலான எண்ணெய் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

பள்ளி பொன் விழா: பின்னா் சென்னை வா்த்தக மையத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டங்களிலும் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.

summary

Development projects worth ₹13,000 crore! Prime Minister Modi to inaugurate them in Chennai today!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments