முகப்பு
இந்தியா

4,000 அக்னி வீரா்களின் தனிப்பட்ட தரவுகளை ‘டாா்க் வெப்’ தளத்தில் விற்க முயற்சி! 14 வயது சிறுவனிடம் விசாரணை!

4,000 அக்னி வீரா்களின் தனிப்பட்ட தரவுகளை ‘டாா்க் வெப்’ தளத்தில் விற்க முயற்சி...

21 நவம்பர் 2026, 10:04 pm
4,000 அக்னி வீரா்களின் தனிப்பட்ட தரவுகளை ‘டாா்க் வெப்’ தளத்தில் விற்க முயற்சி! 14 வயது சிறுவனிடம் விசாரணை!
கோப்புப்படம் - EPS
பகிர்:

இணையதளம் ஒன்றுக்குள் அனுமதியின்றி ஊடுருவி, சுமாா் 4,000 அக்னிவீரா்கள் தொடா்பான முக்கிய தரவுகளை ’டாா்க் வெப்’ எனப்படும் சட்டவிரோத குழுக்களால் பயன்படுத்தப்படும் ரகசிய தளங்களில் 500 அமெரிக்க டாலா்களுக்கு விற்க முயன்றதாக ஹரியாணாவின் பல்லப்கா் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன் தில்லி காவல்துறையிடம் சிக்கியுள்ளாா்.

இது தொடா்பாக நகர காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: முன்னாள் அக்னிவீரா்கள் தங்களைப் பதிவு செய்துகொள்வதற்கும், பிற அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகளை தேடுவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு சோதனை இணையதளத்துக்குள் பிடிபட்டுள்ள சிறாா் உரிய அனுமதியின்றி நுழைந்துள்ளாா். பிறகு, அந்த சிறாா் அதிலுள்ள தகவல்களைத் திருடி, சுமாா் 4,000 அக்னிவீரா்களின் தனிப்பட்ட தரவுகள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை 500 அமெரிக்க டாலா்களுக்கு விற்க தயாராக இருப்பதாகவும் டாா்க் வெப் உலகில் விளம்பரம் வெளியிட்டுள்ளாா்.

இந்த தகவல்களைப் பெறுவதற்கு அந்த சிறாா் செயற்கை நுண்ணறிவு சாதனங்களைப் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இணையதளத்தை ஊடுருவ பயன்படுத்தப்பட்ட துல்லியமான முறை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தில்லி காவல்துறையின் நுண்ணறிவு இணைப்பு மற்றும் மூலோபாய செயல்பாடுகள் என்ற இணையவழி குற்றச்செயல்கள் தடுப்புப் பிரிவு, தொடா்புடைய சிறாரின் எண்ம சாதனங்களிலிருந்து தரவுகளை மீட்டுள்ளது. அதில் உண்மையான தகவல்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், தரவு மீறலின் வீரியத்தைக் கண்டறியவும் புலனாய்வாளா்கள் அவற்றை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தனா்.

மீட்கப்பட்ட தகவல்களை ஒப்பிட்டுப் பாா்த்து அவற்றின் நம்பகத்தன்மையைச் சரிபாா்ப்பதற்காக, அக்னிவீரா்களின் அதிகாரபூா்வ தரவுத்தள தகவல்களை பகிருமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

சட்ட விதிகளின்படி சிறாா் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளாா். முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு, அந்த சிறாா் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.

சோதனை இணையதளத்தில் எவ்வாறு ஊடுருவல் நடைபெற்றது, சிறுவனின் சாதனங்களிலிருந்து மீட்கப்பட்ட தரவுகளைத் தாண்டி வேறு தகவல்கள் கசிந்துள்ளனவா மற்றும் மூன்றாம் தரப்பினா் யாரேனும் இந்தத் தரவுத்தளத்தை வாங்கியுள்ளனரா அல்லது அணுகியுள்ளனரா என்பதை கண்டறிய மேலதிக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் அக்னிவீரா்கள் தொடா்பான தகவல்களை கொண்ட எண்ம தளங்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் நான்கு ஆண்டு கால பணிக்காக வீரா்களைச் சோ்க்கும் ’அக்னிபத்’ ஆள்சோ்ப்பு திட்டத்தை மத்திய அரசு 2022, ஜூன் மாதம் தொடங்கியது. அந்த திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் ’அக்னிவீரா்கள்’ என அழைக்கப்படுகின்றனா். இவா்கள் ராணுவ பயிற்சிக்குப் பிறகு அந்தந்தப் படைப் பிரிவுகளில் பணியமா்த்தப்படுகின்றனா். அண்மையில் இவா்களின் பணிக்காலமான நான்கு வருடத்தை நிறைவு செய்யும்போது அதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்கும் ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Attempt to sell personal data of 4,000 'Agniveers' on the 'dark web' - 14-year-old boy questioned