உண்மையில், தாத்தா சொத்தில் பேரன்களுக்கு பங்கு இல்லையா? நீதியும் நியாயமும் - 14
தாத்தா சொத்தில் பேரன்களுக்குக்கு பங்கு இல்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து...
பிறப்பையும் இறப்பையும் சமநிலையில் வைத்துக் கொண்டாடும் மரபு நம்மிடம் இருக்கின்றது. எதிர்பாராத மரணங்கள் விதிவிலக்கானவை. பிறப்பும் இறப்பும் எளிதாகக் கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல. அது அதிகாரம் தொடர்புடையது. தனது சொத்துகளுக்கு வாரிசு வந்துவிட்டது எனப் பிறப்பைக் கொண்டாடும் மக்கள்தான், வாழ்ந்து மறைந்துவிட்டார் என இறப்பையும் கொண்டாடுகின்றனர். பிறப்பிற்கும் இறப்பிற்கும் பிந்தைய சடங்குகள் ஒவ்வொன்றும் அதிகாரம் கையளிக்கப்படுவதைத்தான் நினைவுபடுத்துகின்றன. அரச குடும்பத்தில் ஒருவர் மறைந்துவிட்டால் அவரின் வாரிசுகளில் ஒருவர் அரசராகப் பொறுப்பேற்றுக்கொள்கின்றார். அதனை நாடறிந்த விழாவாகக் கொண்டாடுகின்றனர். நாட்டின் அதிகாரம் இவரிடம்தான் இருக்கின்றது என்பதை ‘முடிசூடி’ நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்றனர்.
நாட்டிற்குத் தலைமை இருப்பதைப்போல ஒவ்வொரு வீட்டிற்கும் தலைமை உண்டு. தலைமை என்பதே ஓர் அதிகாரச்சொல். அதற்கென ஒரு வலிமை இருக்கின்றது. அதன் உளவியலை அறிந்துதான் தமிழக அரசு குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவி என பெயரைப் பதிவு செய்திருக்கின்றது. பெண்களின் மன வலிமையைக் கூட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் குடும்பத் தலைவி என்ற அடையாளம். நடைமுறையில் ஆண்களின் மனம் அதனை ஏற்கப் பழகியிருக்கின்றது. இந்த மாற்றமே சாதனைதான் என்றாலும் பல நேரங்களில் குடும்பத் தலைவரிடம்தான் அதிகாரம் இருக்கின்றது. எதிர்காலத்தில் இதில் ஒரு சமத்துவம் பிறக்கும்.
ஒவ்வொரு குடும்பமும் ஓர் அரசு என்பதற்கான கட்டமைப்பு நமது பண்பாட்டின் மறைபொருளாக இருக்கின்றது. குடும்பத் தலைவர் இறந்தால் அவருடைய அதிகாரம் வாரிசுகளுக்கு கையளிக்கப்படுவதைச் சுட்டும் நிகழ்வைத்தான் ‘உருமாக் கட்டுதல்’ என்னும் நிகழ்வு நமக்கு நினைவுபடுத்துகின்றது. ஆடிப்பாடி, இறந்தவரைக் காடு சேர்க்கின்றனர். 16 நாள்கள் சடங்குகள் நடைபெறுகின்றன. அந்தக் குடும்பத்தில் உள்ள மூத்த நபரை குடும்பத்தலைவராக பொறுப்பேற்றுக்கொள்ள வைக்கின்றார்கள். நாட்டின் அரசருக்கு ‘மணிமுடி’ என்றால் குடிமக்களுக்கு ‘உருமாக்கட்டு’ என்பது அதிகாரச் சின்னமாக இருக்கின்றது.
Advertisement
Advertisement
பிறப்பையும் இறப்பையும் அதிகார மாற்றத்தின் கருப்பொருளாகக் கருதும் நம் சமூக மரபில் இருந்துதான் ‘Right by birth; Right by death’ என்னும் சொத்துரிமைக் கோட்பாடு தோன்றியிருக்கின்றது. மக்களின் வாழ்வியலில் இருந்துதான்; மரபில் இருந்துதான் சட்டங்கள் தோன்றுகின்றன.
பிறப்பால் வரும் உரிமை என்பது பூர்விகச் சொத்துகளுக்கு மட்டுமே பொருந்தும். தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா ஆகிய மூன்று தலைமுறையினரிடமிருந்து பாகம் பிரிக்கப்படாமல் நான்காவது தலைமுறையினருக்கு கைமாறி வந்திருக்கும் சொத்தானது பூர்விகச் சொத்து (Ancestral Property) எனப்படுகிறது. தாய், பாட்டி அல்லது தாய்மாமன் வழியில் வரும் சொத்துகள் பூர்விகச் சொத்துகள் ஆகா. தந்தை வழி முன்னோர்களிடம் இருந்து வரும் சொத்துகள் மட்டுமே பூர்விகச் சொத்தாகக் கருதப்படுகின்றன. இந்துக் கூட்டுக் குடும்பத்தில், குழந்தை பிறந்த நிமிடத்திலேயே பூர்விகச் சொத்தில் சம பாகம் (Coparcener) கிடைத்துவிடுகின்றது.
பிறப்பால் சொத்துரிமை இருப்பதால், தந்தை உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் தங்களுக்கு உரிய பாகத்தைப் பிரித்துத் தருமாறு கோர முடியும். தந்தை தன்னிச்சையாக முழுச்சொத்தையும் விற்கவோ தானமாகக் கொடுக்கவோ முடியாது. சட்டப்படி அவருக்கு உரிய பாகத்தை மட்டுமே உயில் எழுத முடியும்; பிள்ளைகளின் பாகத்தையும் சேர்த்து உயில் எழுத முடியாது.
ஒருவர் தனது உழைப்பால் வாங்கிய சொத்து, தந்தை அல்லது தாத்தா எழுதி வைத்த உயில் அல்லது தானப் பத்திரம் மூலமாகக் கிடைத்த சொத்து, பூர்விகச்சொத்தில் இருந்து பாகப்பிரிவினை மூலம் கிடைத்த சொத்து ஆகியவை ஒருவரின் தனிப்பட்ட சொத்து (Self - acquired Property) ஆகும்.
மேலும், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு -8 இன்படி உயில் இல்லாமல் இறந்துபோன தந்தையின் தனிப்பட்ட சொத்து மகனுக்குக் கிடைக்கும்போது, அது மகனின் தனிப்பட்ட சொத்தாகும். ஒருவரின் தனிப்பட்ட சொத்தை யாருடைய அனுமதியும் இன்றி விற்கவோ வாங்கவோ முடியும். ஆனால் பூர்விகச் சொத்தை வாரிசுகளின் ஒப்புதல் இன்றி வாங்கவோ விற்கவோ முடியாது. இது தனிப்பட்ட சொத்திற்கும் பூர்விகச் சொத்திற்கும் உள்ள முதன்மையான வேறுபாடாகும்.
கடந்த 06.11.2026 அன்று, Rajesh (minor) through his mother and natural guardian J. Gomathi Vs. M. Kumaran (dead) through LRs & others என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழ்நாட்டு ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது. ‘தாத்தா சொத்தில் பேரனுக்கு பங்கு இல்லை’ எனத் தலைப்புச் செய்திகள் வெளிவந்தன. தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு ஏன் பாகம் இல்லை? எப்போது பாகம் கிடைக்கும்? என்பதை ஒவ்வொருவரும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது.
சொத்துரிமை மாற்றம் தொடர்பாக ஏற்கெனவே நிலைபெற்றுள்ள சட்டங்கள், முன்தீர்ப்புகள் அடிப்படையில்தான் மைனர் ராஜேஷ் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் புதிய விளக்கங்கள் ஏதுமில்லை. அதன் முழுப்பரிமாணத்தையும் விவாதிக்காமல் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளும், சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல்களும் பேரன்களுக்கு அதிர்ச்சியைத் தந்தன. உண்மையில், தாத்தா சொத்தில் பேரன்களுக்கு பங்கு இல்லையா? சிவில் வழக்குத் தெரிந்த வழக்குரைஞர்களை நேர்காணல் செய்து கருத்துகளைப் பதிவிட்டிருக்கலாம். எதிர்காலத்தில் அப்படி ஒரு சூழல் அமையும் என்று நம்புவோம்.
தாத்தா ராமகிருஷ்ணனுக்குப் பாத்தியப்பட்ட சொத்து குறித்து மைனர் ராஜேஷின் தந்தைக்கும் அவரது சகோதரி லலிதா என்பவருக்கும் ஒரு பாகப்பிரிவினை வழக்கு நடைபெற்றுள்ளது. அந்த வழக்கில் மைனர் ராஜேஷின் தந்தையும், அவரது சகோதரி லலிதாவும் செய்துகொண்ட சமரசத்தின் அடிப்படையில் 03.02.1994-இல் நீதிமன்றம் தீர்ப்பாணை பிறப்பித்துள்ளது. மைனர் ராஜேஷின் தந்தையும் அவரது சகோதரி லலிதாவும் தலா பாதிச் சொத்தினை அடைந்து அதற்கு உரிமையாளராகிவிட்டனர். அதன் அடிப்படையில் மைனர் ராஜேஷின் தந்தை 03.04.1997 மற்றும் 17.04.1997 ஆகிய இருவேறு தேதிகளில் இருவேறு நபர்களுக்குச் சொத்தை விற்றுவிடுகிறார். கிரயம் பெற்றவர்கள் அந்தச் சொத்தில் சுவாதீனம் இருந்து அனுபவித்து வருகின்றனர். மைனர் ராஜேஷின் தந்தைக்கு முழு உரிமையுடைய சொத்தைத்தான் (Absolute property) விற்பனை செய்திருக்கின்றார். கிரயம் வாங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில்தான், 06.01.1994இல் பிறந்த மைனர் ராஜேஷ், தனது தாத்தா ராமகிருஷ்ணனின் சொத்தில் தனக்குச் சரிபாதி சொத்து வேண்டும் என பாகப்பிரிவினைக்கு முதல் நிலைத் தீர்ப்பாணை பிறப்பிக்கக் கோரி 1997 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்கின்றார். ராஜேஷ் மைனர் என்பதால் தாய் கோமதியைக் காப்பாளராகக்கொண்டு அசல் வழக்கைத் தாக்கல் செய்கின்றார். அந்த வழக்கில் ராஜேஷின் தந்தை முதல் பிரதிவாதி, ராஜேஷின் தந்தையிடம் இருந்து கிரயம் வாங்கியவர்கள் 2 மற்றும் 3 ஆம் பிரதிவாதிகள். மைனர் ராஜேஷின் தந்தைக்கும் அவரது சகோதரி லலிதாவிற்கும் ஏற்பட்ட சமரச தீர்ப்பு குறித்தோ, தனது தந்தையால் 2 மற்றும் 3 ஆம் பிரதிவாதிகளுக்கு விற்கப்பட்ட சொத்து குறித்தோ மைனர் ராஜேஷ் தனது வழக்கில் எவ்விதமான பரிகாரமும் கோரவில்லை.
முதல் பிரதிவாதியான மைனர் ராஜேஷின் தந்தை வழக்கு நடத்தாமல் தோன்றாத் தரப்பினராகிவிட்டார். கிரயம் பெற்ற 2 மற்றும் 3 ஆம் பிரதிவாதிகள் வழக்கை நடத்தியிருக்கின்றார்கள். விசாரணை நீதிமன்றம் மைனர் ராஜேஷுக்கு ஆதரவாக முதல்நிலைத் தீர்ப்பாணை வழங்கி உத்தரவிட்டது. கிரயம் பெற்ற 2 மற்றும் 3 ஆம் பிரதிவாதிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கின்றார்கள். முதலாவது மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து மைனர் ராஜேஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மைனர் ராஜேஷ் மேல்முறையீட்டு வழக்கில் 1956-ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 6 மற்றும் 8 ஆகியவை விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அவை இந்த வழக்கின் முக்கிய காரணிகள். பிரிவு 6 இன்படி, கூட்டுக் குடும்பத்தில் பிறக்கும்போதே (By Birth) கூட்டுக் குடும்பச் சொத்தில் (Coparcenary Property) சொத்துரிமை கிடைக்கின்றது. மேலும், 2005 ஆம் ஆண்டுத் திருத்தச் சட்டத்தின்படி மகன்களைப் போலவே மகள்களுக்கும் பிறப்புரிமை உண்டு. தந்தை உயிருடன் இருந்தாலும் பூர்விகச் சொத்தில் பேரனுக்குப் பிறப்புரிமை உண்டு. பாகப்பிரிவினை நடைபெறும் வரை அந்தச் சொத்து கூட்டுக்குடும்பச் சொத்தாகவே கருதப்படும்.
1956ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டம், பிரிவு 8 இன்படி, தனிப்பட்ட சொத்து (Self-acquired / Individual Property) மற்றும் உயில் எழுதாமல் இறந்தவரின் தனிப்பட்ட சொத்துகளுக்கு சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகு மட்டுமே வாரிசுகளுக்கு உரிமை உண்டு. முதல் நிலை வாரிசுகள் (Class I Heirs) பட்டியலில் மகள், மனைவி, தாய் ஆகியோருக்குச் சமபங்கு உண்டு. தந்தை உயிருடன் இருக்கும்போது தாத்தாவின் சொத்தில் பாகம் கேட்பதற்கு பேரனுக்கு உரிமை இல்லை. வாரிசுக்குக் கிடைத்தவுடன் அது அவருடைய தனிப்பட்ட முழு உரிமையுள்ள சொத்தாக (Absolute Property) மாறிவிடும்.
மைனர் ராஜேஷின் மேல்முறையீட்டை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956, பிரிவு 8 இன்படி, உயில் எழுதாமல் இறந்துபோன (dying intestate) தந்தையின் சொத்தானது மகனுக்குக் கிடைக்கும்போது, அது அவரின் தனிப்பட்ட சொத்தாகவே (Individual Property) கருதப்படும் என்றும், அது கூட்டுக் குடும்பச் சொத்தாகத் (Coparcenary Property) தொடராது என்றும், தந்தை உயிருடன் இருக்கும்போது, பிரிவு 8 இன் கீழ் முதல்நிலை வாரிசுகள் பட்டியலில் பேரன் (மகனின் மகன்) இடம்பெற மாட்டார் என்றும், தந்தைக்குக் கிடைத்த சொத்தில் மகன் பிறப்புரிமையின் அடிப்படையில் உரிமை கோர முடியாது என்றும் கூறி மைனர் ராஜேஷின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், கூட்டுக்குடும்பச் சொத்து என்ற தகுதி இல்லாத நிலையில், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 6 மற்றும் இந்து வாரிசுரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம், 1989, பிரிவு 29A ஆகியவை மைனர் ராஜேஷ் வழக்கிற்குப் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. மைனர் ராஜேஷின் 30 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. மைனர் ராஜேஷ் இப்போது மேஜர் ராஜேஷ். நல்ல படிப்பினை கிடைத்திருக்கும். அவருடைய குழந்தைகள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்நோக்காமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவார் என்று நம்புகிறேன்.
இந்தியாவில் முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் பார்சி மதத்தைச் சார்ந்தவர்கள் பிறப்பின் அடிப்படையில் சொத்துரிமை பெற முடியாது. இறப்பிற்குப் பின்னரோ (Right by death) அல்லது தானம் மூலமாகவோ மட்டுமே சொத்துரிமை பெற முடியும்.
குடும்ப உறவுகளுக்குள் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் 60 வயதைக் கடந்தவர்கள் தங்களது சொத்துகளை யார், யார்? எவ்வாறு அடைந்து அனுபவிக்க வேண்டும் என்பதை தெளிவான விருப்புறுதி ஆவணமாக எழுதி வைக்க வேண்டும். சிக்கல்களும் மன உளைச்சல்களும் இல்லாத வாழ்க்கையை பிள்ளைகளுக்குக் கையளிப்பதைவிட வேறு என்ன பெரிய செல்வம் இருந்துவிடப் போகின்றது?
நீதிக்கான குரல் ஒலிக்கும்...
நியாயத்திற்கான பயணம் தொடரும்...
கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்
Tamilmani Arumugam, Advocate.
advocatetamilmani@gmail.com