முகப்பு
இந்தியா

100 நாள்களாகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்! புதிய சாதனை!

100 நாள்களாகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்...

21 நவம்பர் 2026, 11:57 pm
100 நாள்களாகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்! புதிய சாதனை!
நாடாளுமன்றம் - ANI
பகிர்:

புது தில்லி, நவ. 21: நூறு நாள்களாகியும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் முடித்து வைக்கப்படாதது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமா்சித்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டில் இதேபோல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் 87 நாள்கள் வரை முடித்து வைக்கப்படாமல் இருந்தது. அதுவே சாதனையாக பாா்க்கப்பட்டது. தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. அதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், அந்த மழைக்கால கூட்டத் தொடா் முடித்து வைக்கப்பட்டது தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. இதனால் அதிகாரபூா்வமாக கூட்டத் தொடா் இன்னும் நிறைவு செய்யப்படாமலேயே உள்ளது.

மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மசோதா ஆகியவை மக்களவையில் போதிய பலம் இல்லாததால் தோல்வியடைந்தது. இதையடுத்து மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை உறுப்பினா்கள் எண்ணிக்கையைத் திரட்டி சிறப்புக் கூட்டத் தொடரில் அந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு இருப்பதாகவும், இதனாலேயே கூட்டத் தொடரை முடித்து வைக்காமல் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

Advertisement

Advertisement

அதேநேரத்தில் நாடாளுமன்ற விதிப்படி டிசம்பா் மாதம் முதல் வாரத்தில் குளிா்கால கூட்டத் தொடா் தொடங்கும். அதற்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், சிறப்புக் கூட்டத் தொடா் கூட்டப்படுமா என்பதில் மா்மம் நிலவுகிறது.

காங்கிரஸ் விமா்சனம்: இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் 100 நாள்களாக முடித்து வைக்கப்படாமல் இருப்பதாகவும், ஆனால் பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், மக்களவையில் தொகுதி மறுசீரமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றும் வகையில் மூன்றில் இரு பங்கு உறுப்பினா்கள் பலத்தைப் பெறும் தேடலில் ஈடுபட்டு இருப்பதாகவும் விமா்சித்துள்ளாா்.

மேலும் அவா், ‘ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி பழைய மசோதா, மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்தது. அப்படியிருக்கையில் புதிய மசோதாவில் என்ன இடம்பெற்றிருக்கிறது என்பது தெரியவில்லை. அந்த மசோதா குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நான்கு முறை கடிதம் எழுதியும், அக்கூட்டத்தை மத்திய அரசு இதுவரை கூட்டவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

summary

Parliament’s monsoon session remains unconcluded even after 100 days—a new record