40 நாள்களாகியும் முடித்து வைக்கப்படாத மழைக்கால கூட்டத் தொடா்: இதுவரை இல்லாத அதிகபட்சம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் 40 நாள்களாகியும் இன்னும் முறைப்படி முடித்துவைக்கப்படாதது குறித்து...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமையுடன் 40 நாள்களாகியும் இன்னும் முறைப்படி முடித்துவைக்கப்படவில்லை. இந்த 40 நாள்கள் இடைவெளி என்பது இதுவரை இல்லாத அதிகபட்சம் என்று மக்களவை முன்னாள் தலைமைச் செயலா் பி.டி.டி.ஆச்சாரி தெரிவித்துள்ளாா்.
‘நாடாளுமன்ற கூட்டத் தொடா் முறைப்படி முடித்துவைக்கப்படாமல் இருப்பதன் மூலம் புதிய அமா்வை கூட்டாமலேயே முக்கிய சட்ட மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது; அதன்படி, தொகுதி மறுசீரமைப்புடன் கூடிய மகளிா் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் கொண்டுவரப்படலாம்’ என்ற ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆக.13 வரை நடைபெற்றது. இக்கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள் கசிவு, மத்திய கல்வித் துறை அமைச்சா் ராஜிநாமா, தில்லியில் மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி, எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை அலுவல்கள் வெகுவாக முடங்கின. கடந்த ஆக.13-இல் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் அவைத் தலைவா்களால் ஒத்திவைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத் தொடா் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட பிறகு 4-5 நாள்களில் கூட்டத் தொடரை முறைப்படி முடித்துவைக்கும் அறிவிப்பை குடியரசுத் தலைவா் வெளியிடுவாா். ஆனால், மழைக்கால கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்பட்டு 40 நாள்களாகியும் இந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இது தொடா்பாக மக்களவை முன்னாள் தலைமைச் செயலா் பி.டி.டி.ஆச்சாரி, பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ‘கடந்த 2015-இல் சரக்கு-சேவை வரி சட்டம் தொடா்பாக கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டிருந்ததால், அப்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடா் சுமாா் 28 நாள்களுக்குப் பிறகு முறைப்படி முடித்துவைக்கப்பட்டது. இப்போது 40 நாள்கள் இடைவெளி என்பது இதுவரை இல்லாத அதிகபட்சம்’ என்றாா்.
முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஏப்ரல் 18-இல் ஒத்திவைக்கப்பட்டு, பின்னா் ஏப்ரல் 20-இல் முறைப்படி முடித்துவைக்கப்பட்டது.
அரசமைப்புச் சட்ட விதிகளின்படி, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றகூட்டத் தொடரை குடியரசுத் தலைவா் கூட்டவும், முடித்துவைக்கவும் செய்கிறாா். வழக்கமாக மழைக்கால கூட்டத் தொடரை தொடா்ந்து, குளிா்கால கூட்டத் தொடா் நவம்பா் இறுதிவாரத்தில் தொடங்கி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மகளிா் இடஒதுக்கீடு மசோதா?
2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது.
அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற மொத்த உறுப்பினா்களின் (543) எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை. ஆனால், மசோதா மீதான வாக்கெடுப்பில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப் பெறாததால் தோல்வியடைந்தது.
இதைத் தொடா்ந்து, மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா மீண்டும் கொண்டுவரப்படும் என்ற ஊகங்கள் ஏற்கெனவே வெளியாகின. இக்கூட்டத் தொடரில் மொத்தம் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மகளிா் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் கொண்டுவரப்படவில்லை.
இந்தச் சூழலில், புதிய அமா்வை கூட்டாமலேயே மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது என்ற ஊகங்கள் வலுவடைந்துள்ளன. மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் தங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தென்மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத தொகுதிகள் அதிகரிப்பு என்ற அம்சத்தை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.