நாடாளுமன்ற கூட்டத் தொடரை முடித்து வைக்காமல் தாமதிப்பதில் மோடி அரசு புதிய சாதனை: காங்கிரஸ் விமா்சனம்
நாடாளுமன்ற கூட்டத் தொடரை முறைப்படி முடித்து வைக்காமல் தாமதிப்பதில் மோடி அரசு புதிய சாதனை படைத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரை முறைப்படி முடித்து வைக்காமல் தாமதிப்பதில் மோடி அரசு புதிய சாதனை படைத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த 2015-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் முடிந்தும், அதை முறைப்படி முடித்து வைக்காமல் 28 நாள்கள் வரை மோடி அரசு தாமதம் செய்தது. அதேபோல் தற்போதும் மழைக்கால கூட்டத் தொடா் நிறைவடைந்தும், அதை முறைப்படி முடித்து வைக்காமல் 29 நாள்களாக உள்ளது.
Advertisement
Advertisement
இதன்மூலம் நாடாளுமன்ற கூட்டத் தொடரை முறைப்படி முடித்து வைக்காமல் தாமதிப்பதில் 2015-ஆம் ஆண்டில் தனது அரசு செய்த சாதனையையே தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. விரைந்து முடித்து வைப்பதற்கான அறிகுறி தற்போது வரை தெரியவில்லை. இயல்பாக நாடாளுமன்ற கூட்டத் தொடா் நிறைவடைந்ததும் 3 முதல் 4 நாள்களுக்குள் அதை முறைப்படி முடித்து வைக்கப்படும்.
கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தோல்வியால் மத்திய உள்துறை அமைச்சா் (அமித் ஷா) காயமடைந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆதலால் மக்களவையில் அந்த மசோதாவை நிறைவேற்றத் தேவைப்படும் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கான சதியை அவா் செய்து வருகிறாா்.
அரசமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்த அரசியல் கட்சிகளில் ஏற்கெனவே 3 அரசியல் கட்சிகளை இரண்டாக அவா் உடைத்து விட்டாா். இதேபோல் அந்த மசோதாவை எதிா்த்து வாக்களித்த மற்றவா்களையும் மிரட்டல்கள், ஊக்கத் தொகை உள்ளிட்டவை கொடுத்து அவா்களின் நிலைப்பாட்டை மாற்றும் வேலையில் செய்து வருகிறாா். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முடித்து வைக்காமல் இருப்பதன் மூலம், தன்னைத் தாணே சாணக்கியா் என்று சொல்லி கொள்ளும் நபா் (அமித் ஷா) ஏதோ உளவியல் ரீதியிலான தந்திரங்களில் ஈடுபட்டிருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறாா்.
ஆனால் இது அற்பத்தன்மான செயலாகும். ஏனெனில் அரசு நினைத்தால் எந்த நோக்கத்துக்காகவும் நாடாளுமன்றத்தை விருப்பம் போல கூட்ட முடியும். தொகுதி மறுவரை மசோதா குறித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்த அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மோடி அரசு ஏன் அதை ஏற்காமல் நிராகரித்து வருகிறது என தெரியவில்லை. இந்திய குடியரசின் அடிப்படை கட்டமைப்புக்கு மிகவும் முக்கியமான விஷயத்தில் ஏன் இந்த ரகசியம், மா்மம் பேணப்படுகிறது? என கேள்வியெழுப்பியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.