நவராத்திரி சிறப்பு அமர்வு? நாடாளுமன்றத்தில் மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா?
நாடாளுமன்றத்தில் மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்...
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற நவராத்திரி பண்டிகை காலத்தில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆக.13 வரை நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டுவரப்படும் என்ற ஊகங்கள் வெளியாகின. ஆனால், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மொத்தம் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மகளிா் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் கொண்டுவரப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆக.13-இல் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் அவைத் தலைவா்களால் ஒத்திவைக்கப்பட்டன. வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத் தொடா் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட பிறகு 4-5 நாள்களில் கூட்டத் தொடரை முறைப்படி முடித்துவைக்கும் அறிவிப்பை குடியரசுத் தலைவா் வெளியிடுவாா். ஆனால், மழைக்கால கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்பட்டு 40 நாள்களாகியும் இந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த 40 நாள்கள் இடைவெளி என்பது இதுவரை இல்லாத அதிகபட்சமாகும்.
Advertisement
Advertisement
இதனால் புதிய அமா்வை கூட்டாமலேயே மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது என்ற ஊகங்கள் வலுவடைந்துள்ளன.
இந்த நிலையில், நவராத்திரி பண்டிகை காலத்தில் அக்டோபர் 11 முதல் 15 வரை சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.
மீண்டும் மகளிா் இடஒதுக்கீடு மசோதா?
2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது.
அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற மொத்த உறுப்பினா்களின் (543) எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை. ஆனால், மசோதா மீதான வாக்கெடுப்பில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப் பெறாததால் தோல்வியடைந்தது.
மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் தங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தென்மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத தொகுதிகள் அதிகரிப்பு என்ற அம்சத்தை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
A special Navaratri session? The delimitation bill in Parliament again?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.