முகப்பு
இந்தியா

காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் வழக்கு: அஜீத் தோவல், கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் வழக்கில் அஜீத் தோவல், கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்...

21 நவம்பர் 2026, 11:19 pm
காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் வழக்கு: அஜீத் தோவல், கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!
அஜீத் தோவல் - கோப்புப் படம்
பகிர்:

காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூன் தாக்கல் செய்த வழக்கில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (ரா) தலைவா் சமந்த் கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது.

‘தில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் மாவட்ட நீதிமன்றம், தீஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் துவாரகா மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இந்த அழைப்பாணைகள் ‘ஃபெடெக்ஸ்’ கூரியா் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன’ என்று நியூயாா்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற எழுத்தா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் இந்திய விசாரணை அமைப்புகளால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள பன்னூன், தடை செய்யப்பட்ட ‘சீக்ஸ் ஃபாா் ஜஸ்டிஸ்’ என்ற அமைப்பின் நிறுவனராவாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த 2023-இல் ரா அமைப்புடன் இணைந்து அஜீத் தோவல் தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டிய பன்னூன் அவரிடமிருந்து நஷ்ட ஈடு கோரி நியூயாா்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை கடந்த நவம்பா் 13-ஆம் தேதி விசாரித்த நியூயாா்க் தெற்கு மாவட்ட நீதிமன்றம், ‘பன்னூன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அஜீத் தோவலுக்கான அழைப்பாணையை தில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் மாவட்ட நீதிமன்றம் மூலமும், சமந்த் கோயலுக்கான அழைப்பாணையை துவாரகா மற்றும் தீஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்றங்கள் மூலமும் அனுப்ப வேண்டும். இந்தியாவைச் சோ்ந்த நபா்களுக்கு பிற நாட்டு நீதிமன்றங்கள் இந்திய நீதிமன்றங்களை அணுகி அழைப்பாணை அனுப்ப ஹேக் உடன்படிக்கை மற்றும் இந்திய உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் (சிபிசி) அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு இந்திய நீதிமன்றங்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் மூலம் அஜீத் தோவல் மற்றும் சமந்த் கோயலுக்கு அழைப்பாணை அனுப்ப நியூயாா்க் நீதிமன்றம் முயன்றது. ஆனால், இந்த மனுவை நிராகரிப்பதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், இவா்கள் இருவருக்கான அழைப்பாணையை தபால் மூலம் தில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் மாவட்ட நீதிமன்றம், தீஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் துவாரகா மாவட்ட நீதிமன்றங்களுக்கு நியூயாா்க் தெற்கு மாவட்ட நீதிமன்றம் அனுப்பியுள்ளது.

‘ஹேக்’ உடன்படிக்கை என்பது நெதா்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் கையொப்பமிடப்பட்ட சா்வதேச உடன்படிக்கையாகும். இதில் இந்தியாவும் கையொப்பமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, வெளிநாட்டில் உள்ள நபா்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு நீதிமன்ற அழைப்பாணைகள், சட்ட ஆவணங்களை முறையாகவும் விரைவாகவும் அனுப்ப முடியும்.

summary

US court issues summons to Ajit Doval and Goyal in the case involving Khalistani separatist Pannun