நவ. 1 நடைபெற்ற தேசிய அனல் மின் கழகத் தேர்வு ரத்தானதாக அறிவிப்பு!
தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) நவ. 1 அன்று நடத்திய 'உதவி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான ‘தேசிய அனல் மின் கழகம்’ (என்டிபிசி) நவ. 1 அன்று நடத்திய 'உதவி அதிகாரி (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்)' பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்வதாக நேற்று (நவ. 21) அறிவித்துள்ளது.
”நிர்வாகக் காரணங்களுக்காக இந்த ஆட்சேர்ப்புக்கான தேர்வு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது” என என்டிபிசி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மறுதேர்வு தொடர்பான எந்தத் தகவலும் தேசிய அனல் மின் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
Advertisement
Advertisement
தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் அந்தத் தொகை திரும்ப வழங்கப்படும் என்றும், அதற்கான விவரங்களைத் தேர்வர்கள் தங்களின் மின்னஞ்சல் மூலம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி அதிகாரி (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) பணிக்கு மொத்தம் 15 காலிப் பணியிடங்களுக்காக இந்தியா முழுவதும் 2,000-க்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதியதாகக் கூறப்படுகிறது.
2 மணி நேரம் நடைபெற்ற இந்தத் தேர்வில் 120 வினாக்கள் (எம்சிக்யூ) கேட்கப்பட்டன. சரியான விடைக்கு 2 மதிப்பெண்களும், தவறான விடைக்கு 0.25 எதிர்மறை மதிப்பெண்களும் வழங்கப்படும் விதமாகத் தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிந்து இறுதிச் சுற்று நேர்காணலுக்காகக் காத்திருந்த தேர்வர்கள் பலரும் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்துள்ளனர். வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு, பயணம் மற்றும் தங்குமிடத்திற்கு அதிக பணம் செலவழித்துச் சென்று பலரும் தேர்வெழுதிய நிலையில் இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
ஏற்கனவே இந்தாண்டு நீட் - யுஜி தேர்வு ரத்து செய்யப்பட்டு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 3,675 மாணவர்களுக்கு சியூஇடி தேர்வு மீண்டும் நடத்தப்பட்ட நிலையில், தற்போது என்டிபிசி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.