முகப்பு

உ.பி. சட்டபேரவைத் தேர்தல்: சமாஜவாதி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்!

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சமாஜவாதி கட்சி - காங்கிரஸ் இடையே முதற்கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நாளை தொடங்கவுள்ளது.

உ.பி. சட்டபேரவைத் தேர்தல்: சமாஜவாதி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் - கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் 2027 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு சமாஜவாதி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தை தில்லியில் நாளை தொடங்கவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை இரு நாள்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தில்லியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரியின் இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய , காங்கிரஸ் மாநிலச் செயல் தலைவர் இம்ரான் மசூத், "நாங்கள் திங்களன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்த சந்திக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார். காங்கிரஸின் பேச்சுவார்த்தைக் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகக் கட்சியினர் தெரிவித்தனர். சமாஜவாதி கட்சியுடன் டிசம்பர் 20-க்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பான உடன்பாட்டை இறுதி செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜவாதி கட்சியுடன் மேற்கொண்ட தொகுதிப் பங்கீட்டில் ​​காங்கிரஸ் 107 தொகுதிகளில் போட்டியிட்டது. அதேபோன்று, இம்முறையும் தங்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.

2017 தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை இக்கூட்டணி பெறாவிட்டாலும், 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் சிறப்பாகச் செயல்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகளில் 43 இடங்களைக் கைப்பற்றி பாஜகவின் வெற்றியை இக்கூட்டணி கட்டுப்படுத்தியது.

தற்போதைய தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் மிகவும் எதிர்பார்ப்புடன் கவனிக்கப்படுகின்றன. வெற்றி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டே தொகுதிகள் ஒதுக்கப்படும் என சமாஜவாதி கட்சி வலியுறுத்தி வருகிறது. 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் செயல்பாடு மற்றும் தேசிய அளவில் ராகுல் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது போன்றவற்றை முன்வைத்து, 2027 தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்க காங்கிரஸ் கோரிக்கை வைத்து வருகிறது.

தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆராதனா மிஸ்ரா மோனா, மாநில செயல் தலைவர் இம்ரான் மசூத் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் வீரேந்திர சௌத்ரி ஆகியோர் இடம்பெறுவர்.

சமாஜவாதி கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ், தர்மேந்திர யாதவ் மற்றும் மக்களவை உறுப்பினர் ராஜீவ் ராய் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு தனியே 4 பேர் கொண்ட குழுவை சமாஜவாதி கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் தலைமையிலான இக்குழுவில், மாநிலத் தலைவர் ஷியாம் லால் பால் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ராஜீவ் ராய், இக்ரா சௌத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சி கோரியதாக 181 தொகுதிகள் அடங்கிய பட்டியல் ஒன்று பரவிய நிலையில் அதனைக் காங்கிரஸ் மறுத்தது. ஆனால், தில்லியில் நடைபெற்ற 'எச்.டி. லீடர்ஷிப் சம்மிட் நிகழ்வில், காங்கிரஸ் 181 தொகுதிகளைக் கேட்டதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஒப்புக்கொண்டார். இது அப்பட்டியலின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.

தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல்கள் வரும் நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கிரஸ் கட்சி 1989-ஆம் ஆண்டு உ.பி. யில் அதிகாரத்தை இழந்தது. அதன் பின்னர், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற மாநிலக் கட்சிகளின் எழுச்சியால் தொடர்ந்து பின் தங்கியது. 2022 தேர்தலில் பகுஜன் சமாஜ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற நிலையில், சமாஜவாதி கட்சி மாநிலத்தின் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயன்று வரும் நிலையில், ஆட்சியை அகற்றி முதல்வராகும் இலக்குடன் சமாஜவாதி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ் செயல்பட்டு வருகிறார்.

summary

UP Assembly Elections: Seat-sharing talks between Samajwadi Party and Congress to begin tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.