அயோத்தி - ஜனக்பூர் நேரடி ரயில்! இந்தியா - நேபாள உறவில் புதிய அத்தியாயம்! யோகி ஆதித்யநாத்
ராமர் – சீதை பிறப்பிடங்களை இணைக்கும் ரயில் பற்றி..

அயோத்தி-ஜனக்பூர் ரயில் இணைப்பு இந்தியா-நேபாள கலாசார உறவுகளில் புதிய அத்தியாயம்! யோகி ஆதித்யநாத்
அயோத்திக்கும் நேபாளத்தில் உள்ள ஜனக்பூருக்கும் இடையே நேரடி ரயில் சேவை தொடங்கப்படுவது, இருபகுதிகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான ஆன்மிக மற்றும் கலாசார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,
Advertisement
Advertisement
பகவான் ராமருடன் தொடர்புடைய புனித நகரமான அயோத்தியையும், அன்னை சீதையின் பிறப்பிடமான ஜனக்பூரையும் இணைக்கும் இந்த ரயில் சேவையை, பிரதமர் மோடியும் நேபாளப் பிரதமர் பாலேன் ஷாவும் இணைந்து கொடியசைத்துத் தொடங்கி வைப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் - நேபாளத்துக்கு இடையே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவரும் உணர்வுப்பூர்வமான மற்றும் கலாசார ரீதியான பிணைப்பு, நவீன ரயில் இணைப்பு மூலம் மேலும் வலுப்பெறும்.
அவத் மற்றும் மிதிலா பிராந்தியங்களுக்கு இடையிலான பாரம்பரிய பிணைப்பைக் குறிப்பிட்ட முதல்வர், இரு பகுதிகளுக்கும் இடையிலான ஆன்மிக, கலாசார மற்றும் சமூக உறவில் ஒரு புதிய பொற்காலம் தொடங்குகிறது.
பிரதமர் மோடியின் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையையும், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்களின் புனிதப் பயணம் எளிதாகும். அதே வேளையில், மதச் சுற்றுலா, கலாசார ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய செழிப்பு ஆகியவற்றிற்கு இது புதிய ஊக்கத்தை அளிக்கும்.
அவத் மற்றும் மிதிலா பகுதிகளை நெருக்கமாக்கும் பரிசாக இந்த ரயில் சேவையைக் குறிப்பிட்ட ஆதித்யநாத், பகவான் ராமரின் பக்தர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நவம்பர் 28 முதல் வழக்கமான சேவையைத் தொடங்கவுள்ள இந்த விரைவு ரயில், அயோத்தி கண்ட் மற்றும் ஜனக்பூர் கோயில் இடையிலான 604 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் 19 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். பயணத்தின் போது பயணிகள் ரயிலை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
இந்தச் சேவை வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும். இது ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாலை 5.50 மணிக்கு அயோத்தி கண்டிலிருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை மதியம் 12.40 மணிக்கு (நேபாள நேரப்படி) ஜனக்பூர் கோயிலைச் சென்றடையும்.
இந்த ரயில் மனகாபூர், பஸ்தி, கோரக்பூர், நர்கட்டியாகஞ்ச், ரக்சால், சீதாமர்ஹி, ஷிஷோ, மதுபானி மற்றும் ஜெயநகர் ஆகிய இடங்கள் வழியாகச் செல்லும்.
திரும்பும் பயணத்தில், இது ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 1.10 மணிக்கு (நேபாள நேரப்படி) ஜனக்பூர் கோயிலிருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 8.10 மணிக்கு அயோத்தி கண்டைச் சென்றடையும்.
அயோத்தி மற்றும் ஜனக்பூர் ஆகிய நகரங்கள் ராமாயண காலத்தின் மத மற்றும் கலாசார மரபுகளுடன் தொடர்புடைய மிக முக்கியமான இடங்களாகும். இந்த இரு நகரங்களுக்கு இடையிலான நேரடி ரயில் இணைப்பு, 'ராமாயண சுற்றுப்பாதை' மற்றும் மதச் சுற்றுலாவுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.