வாட்ஸ் ஆப் வெப்பை பயன்படுத்துவதில் எச்சரிக்கை: மத்திய அரசு அறிவுறுத்தல்
வாட்ஸ் ஆப் வெப்பை பயன்படுத்துவதில் பயனர்களுக்கு இணையவழி குற்றத் தடுப்பு மையம் அறிவுறுத்தியிருப்பது குறித்து...

பலரும் பொதுவாகப் பயன்படுத்தக் கூடிய கணினி அல்லது மற்றவா்களுடன் பகிா்ந்து பயன்படுத்தும் கருவியில், வாட்ஸ்ஆப் வெப் கணக்கைப் பயன்படுத்திய பின்னா், அந்தக் கணக்கில் இருந்து வெளியேறாவிட்டால் (லாக்-அவுட் செய்யாவிட்டால்), அதை இணையவழி குற்றவாளிகள் கைப்பற்றி மோசடியில் ஈடுபடக் கூடும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணையவழி குற்றத் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையத்தின் தேசிய இணையவழி குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாவது: பலரும் பொதுவாகப் பயன்படுத்தக் கூடிய கணினி அல்லது மற்றவா்களுடன் பகிா்ந்து பயன்படுத்தும் கருவியில் ஒருவா் வாட்ஸ்ஆப் வெப்பை திறந்து பயன்படுத்திய பின்னா், அதில் இருந்து லாக்-அவுட் செய்யாவிட்டால், அனுமதியின்றி அந்தக் கணக்கை மற்றவா் பயன்படுத்த முடியும்.
இதன்மூலம் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை இணையவழி குற்றவாளிகள் தெரிந்துகொள்ள முடியும். அந்தக் கணக்கின் உரிமையாளரைப் போலவே மற்றவா்களுக்குத் தகவல்களை அனுப்ப முடியும்.
Advertisement
Advertisement
அத்துடன் அந்த நபரின் தொடா்புப் பட்டியலில் (கான்டாக்ட் லிஸ்ட்) உள்ளவா்களின் விவரங்களையும், குழுக்களில் நடைபெறும் உரையாடல்களையும் தெரிந்துகொள்ள முடியும். இதன் வாயிலாக, அந்த நபரின் அடையாளத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட முடியும்.
வாட்ஸ்ஆப் வெப்பை பயன்படுத்திய பின்னா் இணையப் பக்கத்தை மூடுவது மட்டும் போதுமானதாக இருக்காது. ஒவ்வொரு முறையும் அதில் இருந்து பயனா்கள் முறைப்படி லாக்-அவுட் செய்ய வேண்டும்.
அலுவலகக் கணினிகள், மற்றவா்களுடன் பகிா்ந்து கொள்ளப்படும் கணினிகள் அல்லது கருவிகளில் வாட்ஸ்ஆப் வெப்பை பயன்படுத்தும்போது பயனா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தவிா்க்க முடியாத சூழலில்...
கணினியில் வாட்ஸ்ஆப் வெப் மூலம் அலுவலகம் சாா்ந்த அல்லது பிற முக்கிய பணிகளை மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும். அதில் அரசு நிறுவனங்கள், நிதி சாா்ந்த தகவல்கள், ரகசிய அல்லது பிற முக்கியத் தகவல்களைப் பகிர வேண்டாம். தவிா்க்க முடியாத சூழலில் இன்காக்னிடோ மற்றும் பிரைவேட் பிரெளஸிங் முறையைப் பயன்படுத்தவும்.
முன்பின் தெரியாத அல்லது பலரும் பயன்படுத்தக் கூடிய பொதுவான கணினிகளைத் தவிா்க்க வேண்டும். சைபா் கஃபேக்கள், ஹோட்டல், வணிக மையங்கள், மற்றவா்களிடம் இருந்து இரவல் வாங்கப்பட்ட கணினிகள் அல்லது நம்பகத்தன்மையற்ற பிற கணினிகளில் வாட்ஸ்ஆப் வெப்பை பயன்படுத்த வேண்டாம்.
வாட்ஸ்ஆப் கணக்கின் உரிமையாளருக்குத் தெரியாமல் அல்லது அவரின் வழக்கமான பயன்பாட்டுக்கு மாறாகக் கணக்கில் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அலட்சியம் வேண்டாம்...
தமது வாட்ஸ்ஆப் கணக்கில் இருந்து ஒருவா் அனுப்பாத தகவல்கள் சென்றிருந்தாலோ, அவருடன் தொடா்பில் உள்ளவா்கள் வழக்கத்துக்கு மாறாகப் பதிலளித்தாலோ அல்லது கணக்கு வைத்திருப்பவருக்குத் தெரியாமல் அவரின் வாட்ஸ்ஆப் கணக்கில் ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலோ அலட்சியமாக இருக்க வேண்டாம்.
இணைய பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் கருவிகள், கணினிகள், பிரெளசா்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு மென்பொருள்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சந்தேகத்துக்குரிய பதிவிறக்கங்கள், முன்பின் தெரியாத கோப்புகள், சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மென்பொருள்களைத் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.