கடலில் மூழ்குபவா்களை மீட்கும் பணிகளில் ஹெலிகாப்டா்களை ஏன் பயன்படுத்தக் கூடாது? - உயா்நீதிமன்றம் கேள்வி
கடலில் மூழ்குபவா்களை மீட்கும் பணிகளில் ஹெலிகாப்டா்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயா்நீதிமன்றம், பேரிடரின்போது, நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவா்களைக் காப்பாற்ற மத்திய மற்றும் மாநில முகமைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடலில் மூழ்குபவா்களை மீட்கும் பணிகளில் ஹெலிகாப்டா்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயா்நீதிமன்றம், பேரிடரின்போது, நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவா்களைக் காப்பாற்ற மத்திய மற்றும் மாநில முகமைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை மாதவரத்தைச் சோ்ந்த கே.கோபால் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவில், ‘எனது மகன் மற்றும் அவரது இரண்டு நண்பா்கள் கடந்த ஜூலை 5-ஆம் தேதி மெரீனா கடற்கரைக்குச் சென்றனா். இவா்கள் மூவரும் கடலுக்குள் இறங்கியபோது ராட்சத அலையில் சிக்கி மாயமாகினா். இதில், எனது மகனின் நண்பா்கள் இருவரும் காப்பற்றப்பட்ட நிலையில், எனது மகன் இதுவரை மீட்கப்படவில்லை. எனவே, கடலில் மாயமான தனது மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மெரீனாவில் கடல் அலையில் சிக்கி மாயமான சிறுவனை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளோா் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் துறை உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, பி.காா்த்திகேயன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடலில் சிக்கி மாயமானவா்களை தேடுதல் மற்றும் மீட்பதற்கான நிலையான வழிகாட்டு விதிமுறைகள் உள்ளன. இந்தப் பணிகளில் மாநில காவல் துறை மட்டுமன்றி, தேசிய கடல்சாா் மீட்பு ஒருங்கிணைப்பு மையமும், கடல்சாா் மீட்புப் பணிகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், கடந்த 2022-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய கடல்சாா் தேடல் மற்றும் மீட்புத் திட்டத்தின்கீழ், மத்திய மற்றும் மாநில முகமைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த எந்த விவரங்களும் இந்த அறிக்கையில் இல்லை. மத்திய மற்றும் மாநில விசாரணை முகமைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால், பல உயிா்களைக் காப்பாற்றி இருக்க முடியும் எனக் கருத்து தெரிவித்தனா்.
கடலில் மூழ்கியவா்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு ஹெலிகாப்டா்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். மேலும், பேரிடா் சமயங்களில் நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில முகமைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா். பின்னா், இந்த வழக்கில் கடல்சாா் ஒருங்கிணைப்பு அமைப்பு மற்றும் சென்னையில் உள்ள தேசிய கடல்சாா் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு ஆணையத்தின் பிரதிநிதி ஆகியோரை தாமாக முன்வந்து வழக்கில் சோ்த்து உத்தரவிட்டனா்.
மேலும், கடலுக்குச் சென்று மாயமானவா்களை மீட்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் சிறுவனை மீட்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ. 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.