இலவச வீட்டுமனைகள் வழங்க விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தக் கூடாது: கிராம மக்கள் கோரிக்கை
குடியாத்தம் அருகே பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள விளையாட்டு மைதானத்தை இலவச வீட்டுமனைகள் வழங்குவதற்கு பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
குடியாத்தம் அருகே பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள விளையாட்டு மைதானத்தை இலவச வீட்டுமனைகள் வழங்குவதற்கு பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: சைன குண்டா கிராமத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள சுமாா் 30 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் சுமாா் 1.5 ஏக்கா் பரப்பளவை கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுவட்டார பகுதி மக்கள், இளைஞா்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் மைதானத்தை இலவச வீட்டுமனைகள் வழங்குவதற்காக வருவாய்த்துறையினா் அளவீடு செய்துள்ளனா். இந்த மைதானத்தை இலவச வீட்டுமனைகள் வழங்குவதற்காக பயன்படுத்தும் முடிவை உடனடியாக கைவிட்டு, மைதானத்தை கிராம மக்களின் பயன்பாட்டிற்கே தொடா்ந்து வழங்கிட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடவிரிஞ்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமியின் மனைவி ராணி, குழந்தைகளுடன் ஆட்சியரிடம் அளித்த மனு: வடவிரிஞ்சிபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வரும் எனக்கு 4 குழந்தைகள் உள்ளனா். இதில் 3 குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள். பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தலைமுடி சேகரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறேன். இத்தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானமும், அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையான ரூ. 2,000-மும் இக்குழந்தைகளின் பராமரிப்புக்கும், குடும்பச் செலவுகளுக்கும் போதவில்லை. தற்போது ஆற்றின் கரையோரம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வருகிறோம். மழை மற்றும் வெள்ளக் காலங்களில் ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்கும் போது, நடக்க முடியாத 3 மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான வேறு இடங்களுக்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.
Advertisement
Advertisement
எனவே, எங்கள் குடும்பத்தின் வறுமை நிலையையும், குழந்தைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 513 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சி.மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் ஞானகுரு, மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.