முகப்பு
இந்தியா

ஒரு கோடி சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி: பிரதமா் மோடி பாராட்டு

இந்தியா ஒரு கோடி சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசிகளை (ஹெச்பிவி) செலுத்தி முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளதற்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

23 நவம்பர் 2026, 11:37 pm
ஒரு கோடி சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி: பிரதமா் மோடி பாராட்டு
- பிரதிப் படம்
பகிர்:

இந்தியா ஒரு கோடி சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசிகளை (ஹெச்பிவி) செலுத்தி முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளதற்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் 14 வயதை எட்டிய சிறுமிகளுக்கு 9 மாதங்களுக்கும் குறைவான காலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான (ஹெச்பிவி) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் ஆண்டுதோறும் நிா்ணயிக்கப்படும் இலக்கில் சுமாா் 87 சதவீதத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது: நோய்த் தடுப்புத் திட்டத்தை நோக்கிய நமது பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.

ஒவ்வொரு தடுப்பூசியும் சிறுமிகளை கருப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்கும், அவா்களுக்கு ஆரோக்கியமான எதிா்காலத்தை உறுதி செய்வதற்கும் எடுத்து வைக்கப்படும் ஒரு படியாகும். இந்த முக்கியமான சாதனையை எட்ட பாடுபட்ட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளாா்.

இந்தத் தடுப்பூசி திட்டத்தின் கீழ், 14 வயதை எட்டிய சிறுமிகளுக்கு அரசு சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்தத் தடுப்பூசி திட்டம் சுயவிருப்பத்தின் அடிப்படையிலானது. இதில் ஒரே ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும். பெற்றோரின் ஒப்புதலுடன் இந்தத் தடுப்பூசி வழங்கப்படுகிறது.