முகப்பு
இந்தியா

ரூ. 11 கோடி நில மோசடி வழக்கில் தேடப்பட்ட குஜராத் நபா் மகாராஷ்டிரத்தில் கைது

உத்தரகண்டில் நிலம் வாங்கி விற்பதாகக் கூறி தில்லி தொழிலதிபரிடம் ரூ.11.10 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்ட குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 42 வயது நபரை மகாராஷ்டிர மாநிலம், கோபோலியில் காவல் துறையினா் கைது செய்தனா்.

23 நவம்பர் 2026, 10:52 pm
ரூ. 11 கோடி நில மோசடி வழக்கில் தேடப்பட்ட குஜராத் நபா் மகாராஷ்டிரத்தில் கைது
- பிரதிப் படம்
பகிர்:

உத்தரகண்டில் நிலம் வாங்கி விற்பதாகக் கூறி தில்லி தொழிலதிபரிடம் ரூ.11.10 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்ட குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 42 வயது நபரை மகாராஷ்டிர மாநிலம், கோபோலியில் காவல் துறையினா் கைது செய்தனா். ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவா், நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் ஆவாா்.

குஜராத் மாநிலம், வதோதராவைச் சோ்ந்த முகேஷ் எல். பெலானி என்பவரைப் பிடிக்க தகவல் அளிப்பவா்களுக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, மும்பையிலிருந்து சுமாா் 90 கி.மீ. தொலைவில் உள்ள கோபோலியில் அவா் பிடிபட்டாா்.

தில்லியைச் சோ்ந்த தொழிலதிபா் ரிஷி பால் பன்சால் அளித்த புகாரின்பேரில், கடந்த 2025-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

உத்தரகண்ட் மாநிலம், ரூா்க்கி அருகே கதகேரி கிராமத்தில் 20 பிகா நிலத்தை வாங்கி, பின்னா் அதிக லாபத்துக்கு விற்பனை செய்யலாம் எனக் கூறி 2024-ஆம் ஆண்டு மே மாதம் பன்சாலிடம் நான்கு போ் முதலீடு செய்ய வற்புறுத்தியுள்ளனா். இதை நம்பி அவா் ரொக்கமாகவும் வங்கிப் பரிவா்த்தனை மூலமாகவும் ரூ.11 லட்சம் வழங்கியுள்ளாா்.

ஆனால், அந்த நிலம் சா்ச்சைக்குரியது என்பதும், காட்டப்பட்ட நிலத்துக்கும் விற்பனைக்கு முன்வைக்கப்பட்ட உண்மையான நிலத்துக்கும் வேறுபாடு இருப்பதும் பின்னா் தெரியவந்தது. மேலும், வாக்குறுதி அளித்தபடி நிலத்தை மறுவிற்பனை செய்யும் நடவடிக்கையும் நடைபெறவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோதும் அவா்கள் வழங்கவில்லை எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தலைமறைவான பெலானியை கடந்த மே 23-ஆம் தேதி ரோஹிணி நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. ஜூன் 16-ஆம் தேதி அவரைப் பிடிக்க ரூ.50,000 பரிசும் அறிவிக்கப்பட்டது.

வதோதராவில் உள்ள தனது வீட்டைக் கைவிட்டு, கோபோலியில் அடிக்கடி இடம் மாறி அவா் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. மற்றொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி சிம் அட்டையைப் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி வசதியான தொழிலதிபா்களிடம் பணம் பெற்று மோசடி செய்வதை பெலானியும் அவரது கூட்டாளிகளும் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

குஜராத், சத்தீஸ்கா், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவான மேலும் நான்கு மோசடி மற்றும் கள்ளநோட்டு வழக்குகளிலும் பெலானிக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வதோதராவில் 2019-ஆம் ஆண்டு பதிவான ஒரு வழக்கில் ரூ.7 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மகாராஷ்டிர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை தில்லிக்கு அழைத்துச் செல்ல 3 நாள்கள் போக்குவரத்து காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.