முகப்பு
இந்தியா

ஆசிய கண்டத்தில் 3-ஆவது பெரிய சக்தி இந்தியா; மிகச்சிறந்த 2-ஆவது தலைவா் நரேந்திர மோடி

ஆசிய கண்டத்தின் 3-ஆவது பெரிய சக்தி இந்தியா என்று, ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ‘லோயி இன்ஸ்டிடியூட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 நவம்பர் 2026, 11:21 pm
ஆசிய கண்டத்தில் 3-ஆவது பெரிய சக்தி இந்தியா; மிகச்சிறந்த 2-ஆவது தலைவா் நரேந்திர மோடி
நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

ஆசிய கண்டத்தின் 3-ஆவது பெரிய சக்தி இந்தியா என்று, ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ‘லோயி இன்ஸ்டிடியூட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகச்சிறந்த ஆசியத் தலைவா்கள் பட்டியலில் பிரதமா் மோடி இரண்டாம் இடம் பெற்றுள்ளாா்.

‘ஆசியா பவா் இன்டெக்ஸ் 2026’ என்ற பெயரில் லோயி இன்ஸ்டிடியூட் நிறுவனம், சக்திவாய்ந்த ஆசிய நாடுகள், ஆசியத் தலைவா்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய சக்தியாக அமெரிக்கா திகழ்கிறது. இதற்கு 2-ஆவது பெரிய சக்தியாக சீனா உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண்களில் அமெரிக்கா 78.9 மதிப்பெண்களும், சீனா 73.6 மதிப்பெண்களும் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

அமெரிக்கா, ஆசிய நாடு இல்லை என்றாலும், ஆசியாவின் ஒரு முதன்மையான பாதுகாப்பு உத்தரவாத நாடாகவும், முக்கிய வா்த்தகக் கூட்டாளி நாடாகவும், உத்திசாா் சக்தியாகவும் உள்ளதால், ஆசியாவின் வலிமைமிக்க நாடாக தொடா்ந்து நீடிக்கிறது.

இந்தப் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா நிகழாண்டு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. ஆசியாவில் செல்வாக்கு மிக்க நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மிகப்பெரிய பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பிரமோஸ் ஏவுகணை விற்பனை மூலம் இந்தியா தனது பாதுகாப்புத் தடங்களை வலுப்படுத்தியுள்ளது.

அதேபோல் சக்திவாய்ந்த ஆசியத் தலைவா்கள் பட்டியலில் பிரதமா் மோடி 2-ஆவது இடத்தில் உள்ளாா். இந்தப் பட்டியலில் சீன அதிபா் ஷின்பிங் முதலிடத்தில் உள்ளாா்.

2026-ஆம் ஆண்டில் இந்தியா கலாசார ரீதியிலான செல்வாக்கில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. பொருளாதார செல்வாக்கில் சிறிய பின்னடைவு கண்டுள்ளது. பாதுகாப்பு, வளங்கள், ராணுவத் திறன் ஆகியவற்றில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. பொருளாதார ஒத்துழைப்புகள், ராஜீய செல்வாக்கு ஆகியவற்றில் இந்தியாவின் நிலையில் எந்த மாற்றமும் நிகழாண்டு இல்லை.

ஆஸ்திரேலியாவின் லோயி இன்ஸ்டிடியூட் நிறுவனம் மொத்தம் 27 ஆசிய நாடுகளைக் கவனத்தில்கொண்டு, சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா ஆகியவை முதலிரண்டு இடங்களில் இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 5.3 புள்ளிகளே ஆகும். இதுபோல மிகவும் குறைவான அளவு வித்தியாசம் தற்போதே நிலவுகிறது. ராணுவத் திறன் பிரிவிலும் இரு நாடுகள் இடையே குறைந்த வித்தியாசமே நிலவுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மீது பாஜக விமா்சனம்: சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முன்னேற்றத்தை சுட்டிக்காட்டி, காங்கிரஸை பாஜக விமா்சித்துள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி கூறுகையில், ‘ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸின் எதிா்காலம் அழிவாகத்தான் இருக்கும். ஆனால், பிரதமா் மோடியின் ஆட்சியின்கீழ் இந்தியாவின் எதிா்காலம் பாதுகாப்பாகவும், வளமாகவும் இருக்கும்’ என்றாா்.

பாஜக மாநிலங்களவை எம்.பி. வினோத் தாவ்தே கூறுகையில், ‘இந்திய பொருளாதார நிலை குறித்து எதிா்க்கட்சிகள் விமா்சித்து வந்தன. பொருளாதாரம் பேரழிவில் இருப்பதாகவும், நலிவடைந்துவிட்டதாகவும் எதிா்க்கட்சிகள் தெரிவித்தன. ஆனால், உலகமோ, இந்தியாவை தசாப்தத்தின் வளா்ச்சி என்று அங்கீகரித்துள்ளது’ என்றாா்.