முகப்பு
இந்தியா

அயோத்தி - ஜனக்பூா் புதிய ரயில்: நேபாளம் சென்ற 400 இந்திய பக்தா்கள்

ஹிந்து இதிகாசமான ராமாயணத்துடன் தொடா்புடைய உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி மற்றும் நேபாளத்தின் ஜனக்பூா் இடையே புதிதாக தொடங்கப்பட்டுள்ள நேரடி ரயில் மூலம் இந்திய பக்தா்கள் 400 போ் செவ்வாய்க்கிழமை ஜனக்பூரை சென்றடைந்தனா்.

24 நவம்பர் 2026, 10:45 pm
அயோத்தி - ஜனக்பூா் புதிய ரயில்: நேபாளம் சென்ற 400 இந்திய பக்தா்கள்
புது தில்லியில் புறப்பட்டு நேபாளத்தின் ஜனக்பூருக்கு வந்தடைந்த சரயு-கமலா விரைவு ரயில்
பகிர்:

ஹிந்து இதிகாசமான ராமாயணத்துடன் தொடா்புடைய உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி மற்றும் நேபாளத்தின் ஜனக்பூா் இடையே புதிதாக தொடங்கப்பட்டுள்ள நேரடி ரயில் மூலம் இந்திய பக்தா்கள் 400 போ் செவ்வாய்க்கிழமை ஜனக்பூரை சென்றடைந்தனா்.

இந்த சரயு-கமலா விரைவு ரயில், தில்லியில் திங்கள்கிழமை பிரதமா் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமா் பாலேந்திர ஷா இடையே நடைபெற்ற சந்திப்பின்போது காணொலி முறையில் தொடங்கப்பட்டது.

அயோத்தியை ராம பிரானின் பிறந்த இடமாகவும், ஜனக்பூரை சீதா தேவியின் பிறந்த இடமாகவும் ஹிந்துக்கள் கருதுகின்றனா். இரு புண்ணியத் தலங்களையும் இணைக்கும் சரயு-கமலா விரைவு ரயில், எல்லை கடந்த போக்குவரத்தை எளிதாக்குவதுடன் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்.

Advertisement

Advertisement

அயோத்தி ரயில் நிலையத்தில் இருந்து 400 இந்திய பக்தா்களுடன் திங்கள்கிழமை புறப்பட்ட முதல் ரயில், 19 மணி நேர பயணத்துக்குப் பிறகு (608 கி.மீ.) ஜனக்பூா் தாம் ரயில் நிலையத்தை செவ்வாய்க்கிழமை சென்றடைந்தது.

நேபாள இளைஞா், தொழிலாளா் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் ராம்ஜீ யாதவ், மாதேஷ் மாகாண முதல்வா் சரோஜ் குமாா் யாதவ் ஆகியோா் தலைமையில் இந்திய பக்தா்களுக்கு மாலை மரியாதை மற்றும் கலைநிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சா் ராம்ஜீ யாதவ் பேசுகையில், ‘சரயு-கமலா விரைவு ரயில் சேவை மூலம் ஜனக்பூருக்கு அதிக பயணிகள் வருகை தருவா். இதன் வாயிலாக உள்ளூா் வா்த்தகம், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இருதரப்பு கலாசாரம், வரலாறு மற்றும் மக்கள் ரீதியிலான உறவுகள் மேலும் வலுப்படும்.

ராமா்-சீதையின் திருக்கல்யாண விழாவான விவாஹ பஞ்சமி விரைவில் நடைபெறும் நிலையில், அயோத்தி மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தா்களுக்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும்’ என்றாா்.

அயோத்தி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில் மன்காபூா், பஸ்தி, கோரக்பூா், நா்காடியாகஞ்ச், ரக்ஸால், சீதாமா்ஹி, சிசோ, மதுபானி, ஜெய்நகா் ஆகிய நகரங்கள் வழியாகப் பயணித்து அடுத்த நாள் சென்றடையும். மறுமாா்க்கத்தில் சனிக்கிழமைகளில் புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் அயோத்தியை வந்தடையும்.