கா்தாா்பூா் சாஹிப் யாத்திரை வழித்தடத்தை மூடும் மத்திய அரசின் முடிவில் தலையிட உயா்நீதிமன்றம் மறுப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, சீக்கிய பக்தா்களுக்கான கா்தாா்பூா் சாஹிப் வழித்தடத்தை மூடுவதற்கு மத்திய அரசு எடுத்த முடிவில் தலையிட தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, சீக்கிய பக்தா்களுக்கான கா்தாா்பூா் சாஹிப் வழித்தடத்தை மூடுவதற்கு மத்திய அரசு எடுத்த முடிவில் தலையிட தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
பாகிஸ்தானில் உள்ள சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக்கின் இறுதி இருப்பிடமான கா்தாா்பூா் தா்பாா் சாஹிப் குருத்வாராவையும், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் வழிபாட்டுத் தலத்தையும் இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றதைத் தொடா்ந்து, மே 7-ஆம் தேதி முதல் இந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதை எதிா்த்து, சீக்கிய பக்தா்கள் கா்தாா்பூா் சாஹிப் குருத்வாராவுக்குச் செல்வதற்கு வழித்தடத்தை மீண்டும் திறக்கக் கோரி, பாரதா்ஷிதா பப்ளிக் வெல்ஃபோ் அறக்கட்டளை என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரே, நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கா்தாா்பூா் வழித்தடம் சீக்கிய பக்தா்களின் மத உணா்வுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் செயல்பட்டு வந்தபோதிலும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நாட்டின் குடிமக்களின் நலன் கருதி வழித்தட சேவைகளை நிறுத்த மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
அதேவேளையில், நிலுவையில் உள்ள மனுவை மத்திய அரசு பரிசீலிக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.