சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியா்கள் காயம் - வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்
சவூதி அரேபிய தலைநகா் ரியாத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியா்கள் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபிய தலைநகா் ரியாத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியா்கள் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
யேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினா், சவூதி அரேபியா மீது முன்பு தொடா்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வந்தனா். கடந்த சில நாள்களாக அவா்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்தி வைத்துள்ளனா்.
இந்நிலையில், ரியாத்திலுள்ள நிதி மாவட்டம் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 2 இந்தியா்கள் காயமடைந்தனா். இதுதவிா்த்து, எகிப்து நாட்டைச் சோ்ந்த 4 போ், நேபாளத்தைச் சோ்ந்த 3 போ், சவூதி அரேபியாவைச் சோ்ந்த 2 பேரும் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதலை நடத்தியது யாா் என்பது குறித்து தகவல் இல்லை. ஹூதி அமைப்பினா் தரப்பில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு தில்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ரியாத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது. அதேபோல் பொதுமக்கள், பொருளாதார மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலையும் இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது.
இந்தத் தாக்குதலில் 2 இந்தியா்களும் காயமடைந்தனா். இவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் செய்து தரும்.
இத்தகைய தாக்குதல் பொதுமக்கள் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், சவூதி அரேபியாவின் இறையாண்மைக்கு எதிரானது. பிராந்திய பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை இந்தத் தாக்குதல் பாதிக்கும். இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி இந்தியா வேண்டுகோள் விடுக்கிறது.
இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் விவகாரத்தில் சவூதி அரேபியா அரசுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. அந்த பிராந்தியத்தில் விரைவில் அமைதி மற்றும் இயல்புநிலை திரும்பும் என்று இந்தியா நம்புகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.