சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
சரத் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி...

முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவாா்) தலைவருமான சரத் பவார் (வயது 86) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவாா்) நிர்வாகிகள் கூட்டத்திலிருந்து பாதியில் புறப்பட்டுச் சென்ற அக்கட்சியின் செயல் தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, சரத் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, “சரத் பவாரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவர் சற்று ஓய்வெடுத்து, பயணங்களைக் குறைக்க வேண்டும். ஆனால், அவர் கேட்பதே இல்லை. அவருக்குத் தன் வேலையின் மீது அவ்வளவு ஈடுபாடு!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நலப் பிரச்னையால், கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சரத் பவாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இம்மாத தொடக்கத்தில் மார்பு மற்றும் சுவாசத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியிருந்தார்.