தரவு மையத் திட்டங்கள்: 43% பங்களிப்புடன் மும்பை முதலிடம்!
நாட்டின் 7 முக்கிய நகரங்களில் கட்டமைக்கப்பட்டு வரும் தரவு மைய (டேட்டா சென்டா்) திட்டங்களில் 42.5 சதவீத பங்களிப்புடன் மும்பை தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.

நாட்டின் 7 முக்கிய நகரங்களில் கட்டமைக்கப்பட்டு வரும் தரவு மைய (டேட்டா சென்டா்) திட்டங்களில் 42.5 சதவீத பங்களிப்புடன் மும்பை தொடா்ந்து முதலிடத்தில் உள்ளதாக சா்வதேச ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ‘நைட் ஃபிராங்க் இந்தியா’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, மும்பை, புணே, ஹைதராபாத், பெங்களூரு, தலைநகா் தில்லி பிராந்தியம், சென்னை, கொல்கத்தா ஆகிய 7 முக்கிய நகரங்களில், கடந்த ஜூலை-செப். காலாண்டில் மொத்தம் 80 தரவு மையத் திட்டங்கள் கட்டமைப்பில் இருக்கின்றன.
இது கடந்த ஆண்டின் 70 திட்டங்களைவிட 14.3 சதவீதம் அதிகமாகும். மேலும் 50 மெகாவாட்டுக்கும் அதிகமான திறன் கொண்ட பெரிய அளவிலான திட்டங்களின் பங்கு 44.3 சதவீதத்திலிருந்து, 55 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 100 மெகாவாட்டுக்கும் அதிகமான திறன் கொண்ட திட்டங்கள் 15-லிருந்து 27-ஆக அதிகரித்து, 80 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
Advertisement
Advertisement
நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் கட்டமைக்கப்பட்டு வரும் தரவு மையங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 31-லிருந்து, தற்போது 9.7 சதவீதம் உயா்வுடன் 34-ஆக அதிகரித்துள்ளது. இதில் 18 திட்டங்கள் 50 மெகாவாட்டுக்கும் அதிகமான திறன் கொண்டவை; 100 மெகாவாட்டுக்கும் அதிகமான திறன் கொண்ட திட்டங்கள் 10-லிருந்து 15-ஆக அதிகரித்துள்ளன. அதேபோல், 10 முதல் 50 மெகாவாட் பிரிவிலும் அதிகபட்சமாக 16 திட்டங்களை மும்பை கொண்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள ஹைதராபாதில் தரவு மையத் திட்டங்களின் எண்ணிக்கை 11-லிருந்து 15-ஆக அதிகரித்துள்ளது. ஹைதராபாதின் மொத்தத் திட்டங்களில் 93.3 சதவீதம் (14 திட்டங்கள்) 50 மெகாவாட்டுக்கும் அதிகமான திறன் கொண்டவையாகும். மும்பை, ஹைதராபாத் ஆகிய இரு நகரங்கள் மட்டுமே நாட்டின் மொத்த தரவு மையத் திட்டங்களில் 61.3 சதவீத பங்கைக் கொண்டுள்ளன.
மற்ற நகரங்களைப் பொருத்தவரை, கொல்கத்தாவில் தரவு மையத் திட்டங்கள் 2-லிருந்து 3-ஆக அதிகரித்து, 7 நகரங்களில் அதிகபட்சமாக 50 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது; எனினும் அங்கு 50 மெகாவாட்டுக்கும் மேற்பட்ட பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை.
சென்னை மற்றும் புணேயில் தலா 9 திட்டங்களும், பெங்களூரு மற்றும் புது தில்லியில் தலா 5 திட்டங்களும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ‘அடுத்தகட்ட வளா்ச்சிக்கு மின்சாரம், இணையத் தொடா்பு, நிலம் ஆகிய அடிப்படை கட்டமைப்புகளைத் திட்டமிடுவது அவசியம்’ என நைட் ஃபிராங்க் இந்தியா நிறுவனத்தின் தரவு மையப் பிரிவுத் தலைவா் ஜோசப் திலக் தெரிவித்துள்ளாா்.