தொகுதி மறுவரையறைக்கு எதிராகக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்! சிஜேபி வலியுறுத்தல்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றிணைய சிஜேபி அழைப்பு...
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என கரப்பான்பூச்சி கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. அதேசமயம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிப்பதற்கான திட்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவை நவ. 30 ஆம் தேதியும், மாநிலங்களவை டிச. 2 ஆம் தேதியும் சிறப்பு அமர்வாகக் கூடவுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மத்திய அரசு மீண்டும் கொண்டு வரவுள்ள மசோதாக்களை பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சிஜேபி கட்சி வெளியிட்ட அறிக்கையில்,
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்க வேண்டும்.
ஆளும் கட்சிக்குச் சாதகமாக நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சுயநலத்துடன் மாற்றி அமைப்பது, தொகுதி மறுவரையறை முறைகேடு ஆகும். இது, மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
இந்தியாவின் தேர்தல் வரைபடத்தைச் சிதைக்கும் இந்தச் செயலுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். குறிப்பிட்ட தொகுதிகளில் வாக்காளர்களைக் குவித்து, அவர்களை மற்ற தொகுதிகளில் பிரிப்பதன் மூலம், பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமலேயே அரசியல் முடிவைப் பாதிக்க முடியும்.
போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளும், சுதந்திரமான கண்காணிப்பும் இல்லாத நிலையில், தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்வது, பாஜகவுக்கு நீண்டகாலத் தேர்தல் நன்மைகளைப் பெற்றுத் தரும் வகையில் பயன்படுத்தப்படலாம்.
இந்த எல்லைகள் ஆளும் கட்சிக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்டால், பொதுமக்களின் கருத்துகளில் ஏற்படும் மாற்றங்கள் நாடாளுமன்றத்தின் கட்டமைப்பில் நியாயமான முறையில் பிரதிபலிக்காத சூழல் உருவாகலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.