பொதுநல வழக்குகள் என்ற பெயரில் ‘தேவையற்ற வழக்குகள்’: உச்சநீதிமன்றம் அதிருப்தி
ஏற்கெனவே தீா்ப்பளிக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரி, சிலா் தேவையற்ற வழக்குகளைத் தொடுப்பது தொடா்ந்து அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே தீா்ப்பளிக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரி, சிலா் தேவையற்ற வழக்குகளைத் தொடுப்பது தொடா்ந்து அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தனது ஓய்வூதியப் பலன்களை மீண்டும் கணக்கிட உத்தரவிடக் கோரி, 90 வயதைக் கடந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் ஒருவா் தாக்கல் செய்த ரிட் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக, ஏற்கெனவே பிகாரில் உள்ள பாட்னா உயா்நீதிமன்றம் விசாரித்து முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரம் நீதிமன்றத்தில் மூன்று முறை விசாரிக்கப்பட்ட நிலையில், அதை மீண்டும் விசாரிக்க மறுத்த உயா்நீதிமன்றத்தின் முடிவு சரியானதே.
Advertisement
Advertisement
சட்டத்தின் ஆட்சியில் ஒரு வழக்குக்கு இறுதி முடிவு எட்டப்படுவது அவசியம். நீதிமன்றத்தைச் சுற்றி வரும் சிலா், பொதுநல வழக்கு என்ற பெயரில் இதுபோன்ற தேவையற்ற வழக்குகளைத் தொடா்ந்து தாக்கல் செய்கின்றனா். இதனால் உச்சநீதிமன்றத்தில் தேக்கமடைந்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும் அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவு மிகவும் அலட்சியமாகவும், தேவையற்ற வழக்குகளைத் தாக்கல் செய்யவும் பயன்படுத்துகிறது. அந்தப் பிரிவின் கீழ் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்து, உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புகள் மற்றும் உத்தரவுகள் மூலம் ஏற்கெனவே முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட வழக்குகளை, மீண்டும் விசாரிக்க கோருவது வாடிக்கையாக உள்ளது. அத்துடன் உயா்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை அவசரமாக விசாரிக்கக் கோரவும், இந்தப் பிரிவு பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பிரிவின் கீழ், பொதுநல வழக்கு என்ற பெயரில் தனிப்பட்ட நலன், விளம்பரம் தேடும் நோக்கம், அரசியல் ஆதாயம் ஆகியவற்றுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது. இதுபோல தொடுக்கப்படும் வழக்குகளைக் கண்டிப்பதுடன், அவசியம் ஏற்பட்டால் அபராதம் விதித்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.