முகப்பு
இந்தியா

ஜாா்க்கண்டில் காா் விபத்து: குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஜாா்க்கண்டில் கனரக வாகனம் மீது காா் மோதிய விபத்தில் 5 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.

30 நவம்பர் 2026, 12:54 am
ஜாா்க்கண்டில் காா் விபத்து: குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!
பகிர்:

ஜாா்க்கண்டில் கனரக வாகனம் மீது காா் மோதிய விபத்தில் 5 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 13 போ் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா்.

இவா்கள் அனைவரும் பிகாரைச் சோ்ந்தவா்களாவா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரிட்ட இந்த விபத்து குறித்து காவல் துறையினா் கூறியதாவது: பிகாரின் நாளந்தா மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 14 போ், ஜாா்க்கண்டின் ராஜ்ரப்பா பகுதியில் உள்ள பிரசித்திப் பெற்ற சின்னமஸ்தா தேவி கோயிலுக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தனா்.

ராம்கா் மாவட்டத்தில் உள்ள ராஞ்சி-பாட்னா நெடுஞ்சாலையில் பெயின்கி கிராமம் அருகே வேகமாக சென்றபோது கனரக வாகனம் ஒன்றின் மீது காா் பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் காா் சிதைந்து நொறுங்கியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல் துறையினா் மற்றும் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்த கோர விபத்தில் 5 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 13 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். நொறுங்கிய காரில் சிக்கியிருந்த அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் ஒருவா் படுகாயத்துடன் மீட்கப்பட்டாா்.

ராம்கரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்தில் இருந்து கனரக வாகனத்துடன் அதன் ஓட்டுநா் தப்பிவிட்டாா். அவரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

தலைவா்கள் இரங்கல்: ஜாா்க்கண்ட் காா் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, ஜாா்க்கண்ட் ஆளுநா் சந்தோஷ் குமாா் கங்வாா், முதல்வா் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவருக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.