FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

'கழுதை'க்கு தற்காலிக செவிலியர் சான்றிதழ்: எங்கு வழங்கப்பட்டது தெரியுமா..?

‘கழுதை’யின் பெயரிலேயே தற்காலிக செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி சம்பவம் குறித்து...

'கழுதை'க்கு தற்காலிக செவிலியர் - மகப்பேறு உதவியாளர் சான்றிதழ் - படம்: இபிஎஸ்
பகிர்:

போபால்: மத்தியப் பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி சான்றிதழ் வழங்கும் முறையில் உள்ள கடுமையான குளறுபடிகளை அம்பலப்படுத்தும் நோக்கில், கழுதையின் புகைப்படத்துடன் விண்ணப்பித்த 5 நிமிடத்தில் முறைப்படி ‘கழுதை’யின் பெயரிலேயே தற்காலிக பதிவு செய்யப்பட்ட செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த விண்ணப்பத்தில் தந்தையின் பெயர் "கழுதை தந்தை" என்றும், மதம் "பிற" என்றும், ஜாதி "விலங்கு" என்றும், முகவரி "இடம் கிடைக்கும் இடம்" என்பது போன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கழுதையினுடைய புகைப்படமும் பதிவேற்றப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, மாநில நர்சிங் கவுன்சிலின் மூலம் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஒரு டிஜிட்டல் சான்றிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், விண்ணப்பதாரர் 2021 ஜூலை 16 முதல் 2025 ஆகஸ்ட் 13 வரை போபால் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் பயிற்சியை முடித்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மத்தியப் பிரதேசத்தில் நர்சிங் கல்லூரிகளில் போலி அங்கீகாரம் மற்றும் ஊழல் புகார்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த மாநில நர்சிங் கவுன்சிலின் புதிய இணையதள சரிபார்ப்பு முறையின் நம்பகத்தன்மையைச் சோதித்துப் பார்ப்பதற்காக மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-யின் மாநில துணைத் தலைவர் ரவி பார்மர் முடிவெடுத்தார். அதன்படி, இணையதளத்தில் செவிலியர் பதிவுக்காக ஒரு மாதிரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர் இடத்தில் ‘கழுதை’என்றும், பெற்றோர் பெயர் உள்ள இடங்களில் ‘கழுதை தந்தை’மற்றும் ‘கழுதை தாய்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஜாதிப் பிரிவில் ‘விலங்கு’என்றும், முகவரியில் " கிடைக்கும் இடம்" என்பது போன்று கற்பனையான விவரங்களும் பதிவு செய்யப்பட்டன. ஆவணங்களின் இடத்தில் வெற்றுத் தாள்களும், புகைப்படப் பிரிவில் ஒரு நிஜக் கழுதையின் புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இத்தகைய போலியான விவரங்களுடன் தேவையான பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட வெறும் 5 நிமிடங்களில், எந்தவித நேரடி கள ஆய்வோ அல்லது ஆவணச் சரிபார்ப்போ இன்றி, போபால் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் முடித்ததாகக் குறிப்பிட்டு ‘கழுதை’யின் பெயரில் முறைப்படி அதிகாரப்பூர்வ தற்காலிக டிஜிட்டல் சான்றிதழை கவுன்சில் வழங்கியுள்ளது.

சான்றிதழில், விண்ணப்பதாரர் 2021 ஜூலை 16 முதல் 2025 ஆகஸ்ட் 13 வரை போபால் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் பயிற்சியை முடித்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்தச் சான்றிதழ் "பதிவுசெய்யப்பட்ட செவிலியர் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மகப்பேறு உதவியாளர்" என்பதற்கான பதிவு குறிப்பிட்டிருப்பதுடன், 2031 செப்டம்பர் வரை செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நர்சிங் கவுன்சில் அதிகாரிகள், "மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பதிவை வெளிப்படையானதாக மாற்றவும், காகிதப் பணிகளைக் குறைக்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டைத் தடுக்கவே இந்த தானியங்கி இணையவழி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ததும், பதிவு எண் உருவாக்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து தகுதிகள் மற்றும் ஆவணங்கள் இணையவழியில் சரிபார்க்கப்படுகின்றன. மோசடியான தகவல்கள், புகைப்படங்கள் அல்லது ஆவணங்கள் கண்டறியப்பட்டால், ஏழு முதல் 15 நாள்களுக்குள் பதிவுகள் ரத்து செய்யப்படலாம் என்று கூறினார்.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் சமர்ப்பிக்கும் தகவல்கள் மற்றும் ஆவணங்களின் நம்பகத்தன்மைக்கு அவர்களே பொறுப்பு என்று கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

மேலும், "தற்காலிகப் பதிவிற்கும் நிரந்தரச் சான்றிதழுக்கும் வித்தியாசம் உள்ளது. விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும் உடனடியாக உருவாக்கப்படும் இது வெறும் தற்காலிகப் பதிவு மட்டுமே; இந்தத் தற்காலிகப் பதிவு, நர்சிங் கவுன்சிலின் சரிபார்ப்புக்கு உட்பட்டது" என்று தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இணையவழிப் பதிவு வசதி தற்காலிகமாக இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படுத்த உள்ளதாகவும், ஏற்கனவே செயலாக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். டிஜிலாக்கரை உள்ளடக்கிய ஒரு தரவுப் பரிமாற்ற வழிமுறையும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் இணையதளத்தில், பதிவு விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரால் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மோசடியான தகவல்களைச் சமர்ப்பித்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவம், சுகாதாரத் துறைக்கு, இணையவழிப் பதிவுச் செயல்முறையின் ஆரம்பக் கட்டத்திலேயே வலுவான சரிபார்ப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டியுள்ளது.

இந்தச் சம்பவம் போலிச் சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் இதுபோன்ற தொழில்நுட்ப குறைபாடுகளைப் பயன்படுத்தி சுகாதாரத் துறைகளில் பணி வாய்ப்புகளை பெறக்கூடும் என்ற கவலையையும் எழுப்பியுள்ளது.

இருப்பினும், மக்கள் உயிரைக் காப்பாற்றும் உன்னதமான மருத்துவத் துறையில், விலங்கின் பெயரிலும் புகைப்படத்துடனும் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களைக் கூட ஆரம்பக்கட்ட தொழில்நுட்பக் கட்டமைப்பில் கண்டறிய முடியாமல் சான்றிதழ் வழங்கப்படுவது நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

முந்தைய பதிவு முறை, விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், செவிலியர் படிப்பு நிறைவு சான்றிதழ்கள், தற்காலிகப் பட்டங்கள் அல்லது பட்டயங்கள் மற்றும் கல்வி மதிப்பெண் பட்டியல்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட கல்வி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இந்த ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கு உட்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

The MPNRC issued the digital certificate on September 25 in the name of “Donkey MPNRC”.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments