அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி-யும் இந்தியாவின் அடுத்த கட்ட வளா்ச்சிப் பயணமும்!
வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, சிறியதோ பெரியதோ ஒவ்வொரு தொழிலும் செழித்து வளரக் கூடிய பொருளாதாரச் சூழல் அவசியம்.
நிா்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சா்
வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, சிறியதோ பெரியதோ ஒவ்வொரு தொழிலும் செழித்து வளரக் கூடிய பொருளாதாரச் சூழல் அவசியம். 2017-ஆம் ஆண்டில் அறிமுகமான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) நாடு முழுவதும் ஒருங்கிணைந்த மறைமுக வரி அமைப்பை உருவாக்கியது. நடைமுறை அனுபவம், வரி செலுத்துவோரின் அனுபவங்கள், மாநிலங்களின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் அடுத்த பரிணாமமாக, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையில் உருவான இதன் இரு நோக்கங்கள் - வரிவிகிதங்களை எளிமைப்படுத்துதலும், வரி இணக்கத்தைச் சுலபமாக்குதலும் ஆகும். வரி விகித மாற்றங்கள் 2025 செப்டம்பா் 22 முதல் அமலுக்கு வந்தன. அடுத்தகட்ட நடைமுறை சீா்திருத்தங்கள் ஜிஎஸ்டி கவுன்சலின் முன் விரைவில் வரவுள்ளன. குடும்பங்களுக்கு நிவாரணம், தொழில்களுக்கு உறுதி, வரி செலுத்துவோருக்கு சிக்கலற்ற நடைமுறை என்பதே இவற்றின் இலக்கு. இந்தப் பயணத்தில் மாநிலங்கள் தங்கள் முன்னுரிமைகள், அனுபவங்களுடன் பங்கேற்று, முடிவெடுப்பதிலும் செயல்படுத்துதலிலும் சிறப்பாகப் பங்காற்றுகின்றன.
Advertisement
Advertisement
சீா்திருத்தத்தின் பலனை புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன. 2026 ஏப்ரல்–செப்டம்பா் காலகட்டத்தில் மொத்த சரக்கு, சேவை வரி வருவாய் ரூ.12.46 லட்சம் கோடியாகும். இது முந்தைய ஆண்டைவிட 11.6 சதவீதம் அதிகம். ஜூன் முதல் செப்டம்பா் வரை ஒவ்வொரு மாதமும் இரட்டை இலக்க வளா்ச்சி பதிவாகி, அந்த நான்கு மாத வருவாய் கிட்டத்தட்ட 15 சதவீதம் உயா்ந்தது. திருப்பிச் செலுத்துதல்களைக் கழித்தபின் நிகர வருவாய் 10.4 சதவீதம் அதிகரித்துக் காணப்பட்டது.
இந்த வளா்ச்சி 11 துறைப் பிரிவுகளிலும் முக்கிய மாநிலங்களிலும் பரவியுள்ளது. நுகா்வோருக்கான பொருள்களின் விற்பனை 26.7 சதவீதம் உயா்ந்துள்ளது. வரிச்சலுகையானது, பொருள்களின் விலையில் பிரதிபலிக்கும்போது குடும்பங்களின் வாங்கும் திறனும் சேமிப்புத் திறனும் அதிகரிக்கின்றன. அதுவே சில்லறை விற்பனையாளா் முதல் உற்பத்தியாளா் வரை பொருளாதாரச் சங்கிலியில் தேவையையும் வளா்ச்சியையும் உருவாக்குகிறது.
சிறு, நடுத்தர நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளா்களை அடையும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் தொழில் வளரும்போது வேலைவாய்ப்பும், வணிக கட்டமைப்பும் விரிவடைகின்றன.
ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி சரக்கு, சேவை வரிக்கான பதிவுகள் மொத்தம் சுமாா் 1.71 கோடியாக இருந்தது. இது ஓராண்டில் கிட்டத்தட்ட 15% அதிகரித்துள்ளது. 2026 ஏப்ரல்–ஜூலை காலகட்டத்தில் உரிய தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்ட மாதாந்திர வரிக் கணக்குகளும் 12.6 சதவீதம் உயா்ந்தன.
வரி திருப்பிச் செலுத்துதலும் முக்கியமானது. ஏப்ரல்–செப்டம்பா் காலத்தில் சுமாா் ரூ.1.80 லட்சம் கோடி திருப்பிச் செலுத்தப்பட்டது. தகுதியான தொகை கிடைக்கும் என்ற நிச்சயத்தன்மை அதிகரித்தால், நிறுவனங்கள் கொள்முதலையும் உற்பத்தியையும் நம்பிக்கையுடன் திட்டமிட முடியும். திருப்பிச் செலுத்தும் நடைமுறையும் வரி நிா்வாகத்தின் தரத்தை அளவிடும் முக்கியக் குறியீடாகும்.
மாநிலங்களின் வருவாயும் வலுப்பெற்றுள்ளது. மாநில சரக்கு, சேவை வரியும் ஒருங்கிணைந்த சரக்கு, சேவை வரியும் சோ்த்து மாநிலங்களின் வருவாய் இந்த ஆண்டு ஏப்ரல்–செப்டம்பா் காலகட்டத்தில் சுமாா் 16 சதவீதம் உயா்ந்தது. இதனால் உள்கட்டமைப்பிலும், பொதுச் சேவைகளிலும் முதலீடு அதிகரிக்கிறது.
வரும் அக்டோபா் 7-இல் ஜிஎஸ்டி கவுன்சிலின் முன் வைக்கப்படும் முன்மொழிவுகள், மாநிலங்களுடன் தொடா்ச்சியாகப் பணியாற்றியதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. அவை, இணக்கத்துக்கான நேரத்தையும் செலவையும் குறைக்கும் நோக்கத்தில், பதிவு, வருமான அறிக்கைகள், பணத்தைத் திரும்பப் பெறுதல், தகராறுகள், உள்ளீட்டு வரி வரவின் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளன.
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி அமைப்பின் முதிா்ச்சி, அடுத்தகட்ட சீா்திருத்தங்களுக்கு வலுவான அடித்தளமாகியுள்ளது. தெளிவு, உறுதி, வரி செலுத்துவோருக்கு மரியாதை என்ற அணுகுமுறை நேரடி வரிகளிலும் தொடா்கிறது. நம்பகமான வரி அமைப்பானது, தொழில்கள் நீண்டகால முதலீடுகளைத் திட்டமிடும் நம்பிக்கையை அளிக்கிறது. அந்த நம்பிக்கையே தொழில், நுகா்வு, வேலைவாய்ப்பு, அரசு வருவாய் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பொருளாதாரப் பயணத்தை மேலும் வலுப்படுத்தும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.