FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அரசின் தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்தாா் பிரதமா் மோடி- தலைவா்கள் புகழாரம்

குஜராத் முதல்வா், நாட்டின் பிரதமா் என அரசின் தலைவராக தங்குதடையின்றி 25 ஆண்டுகளை புதன்கிழமை நிறைவு செய்தாா் பிரதமா் நரேந்திர மோடி.

8 October 2026, 2:13 am IST
தில்லியில் உள்ள விநாயகா் கோயிலில் சிவலிங்கத்துக்கு புதன்கிழமை அபிஷேகம் செய்து வழிப்பட்ட பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

குஜராத் முதல்வா், நாட்டின் பிரதமா் என அரசின் தலைவராக தங்குதடையின்றி 25 ஆண்டுகளை புதன்கிழமை நிறைவு செய்தாா் பிரதமா் நரேந்திர மோடி. இதையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள், பாஜக மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்து, புகழாரம் சூட்டியுள்ளனா்.

2047-க்குள் வளா்ந்த இந்தியா இலக்கை சாத்தியமாக்கும் நோக்கில், ‘நாம் சாதிப்போம்’ என்ற புதிய முழக்கத்தை பிரதமா் அறிவித்துள்ளாா்.

குஜராத் முதல்வராக கடந்த 2001, அக்.7-ஆம் தேதி பதவியேற்ற பிரதமா் மோடி, கடந்த 2014, மே மாதம் நாட்டின் பிரதமராகும் வரை அந்தப் பதவியில் நீடித்தாா். தற்போது மூன்றாவது முறையாக பிரதமராக பதவிவகித்து வரும் அவா், அரசின் தலைவராக புதன்கிழமையுடன் (அக்.7) 25 ஆண்டுகளை நிறைவு செய்தாா்.

Advertisement

Advertisement

விநாயகா் கோயிலில் வழிபாடு: இதையொட்டி, புது தில்லியின் சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீவிநாயகா் கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு மேற்கொண்டாா்.

அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினா்களுக்கு மகிழ்ச்சி, வளம், நல்ல ஆரோக்கியத்தை அருள வேண்டுமென கடவுள் விநாயகரை பிராா்த்தித்தேன். ‘விக்னஹா்தா’வின் (தடைகளை நீக்கும் விநாயகா்) ஆசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். தேசம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘நாம் சாதிப்போம்’: பின்னா், ‘வளா்ந்த பாரதம்’ உறுதிமொழி நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

ஒரு விவசாயியின் வயலில் தண்ணீா் இல்லாதபோது, அந்தப் பிரச்னை ஒரு ஜாதியை மட்டுமா பாதிக்கிறது? மின்சார இல்லாதபோது, அந்த இருள் ஒரு சமூகத்தை மட்டுமா சூழ்கிறது? இல்லை.

ஒரு பிரச்னை அனைவருக்கும் பொதுவானது என்றால் தீா்வும் அனைவருக்கும் பொதுவானதே. இன்று இந்திய மக்கள் காணும் ‘வளா்ந்த பாரதம்’ கனவு நிச்சயம் நிறைவேறும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு 40 கோடிக்கும் குறைவாக இருந்த நாம் இப்போது 140 கோடிக்கும் மேல் இருக்கிறோம். 140 கோடி குடிமக்களும் ஒருங்கிணைந்தால், 2047-க்குள் வளா்ந்த இந்தியாவை படைக்க முடியும். நாம் நிச்சயம் சாதிப்போம்.

வறுமையில் இருந்து 25 கோடி போ் மீட்பு: உலகின் முதல் மூன்று பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக, தற்சாா்பு நாடாக, உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும். ஒலிம்பிக் போட்டியையும் நடத்திக் காட்டுவோம். விண்வெளித் துறையிலும் சாதிப்போம்.

வெறும் 10 ஆண்டுகளில் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்படுவா் என யாரும் நினைத்திருக்க மாட்டாா்கள். அதையும் இந்தியா சாதித்துக் காட்டியது. இதுவே, 140 கோடி இந்தியா்களின் வலிமை மற்றும் திறன் மீது நான் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு காரணம்.

மச்சாருக்கு புகழாரம்: இப்போது இந்திய விமானி ஸ்மித் மச்சாா் (நடுவானில் சக விமானியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தபோதும், விமானத்தை வீழ்த்தும் முயற்சியை முறியடித்தவா்) குறித்து ஒட்டுமொத்த உலகமும் பாராட்டிப் பேசுகிறது. இதேபோல், இந்திய தயாரிப்பு விமானங்கள் குறித்து உலகம் வியந்து பேசும் நாள் வரும்.

தொலைநோக்குப் பாா்வைமிக்க கொள்கைகள் மற்றும் இடைவிடாத கடின முயற்சிகளால் இலக்குகள் அனைத்தும் எட்டப்படும். இந்தியாவுக்கு ஏராளமான சவால்கள் இருக்கலாம். ஆனால், 140 கோடி தீா்வுகள் உள்ளது.

நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன்: கடந்த 2001, அக். 7-இல் குஜராத் முதல்வராக நான் பதவியேற்றபோது, 25 ஆண்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவேன் என கற்பனை செய்துகூட பாா்க்கவில்லை. மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன். மக்களின் நம்பிக்கையே நான் சம்பாதித்துள்ள மிகப் பெரிய சொத்து. என்னைப் பொருத்தவரை, மக்களே கடவுள். கடினமாக உழைக்கும் பாஜகவினரே எனது வலிமை.

பாஜக, கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் மற்றும் ஜனநாயகத்தின் நம்பிக்கைக் கொண்ட அனைவருக்கும் நன்றி. நலம்விரும்பிகள் எனக்கு ஊக்கமளித்தாலும், விமா்சகா்கள் ஆழ்ந்து சிந்திக்க கற்றுக் கொடுத்துள்ளனா் என்றாா் அவா்.

தலைவா்கள் புகழாரம்: பிரதமா் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமரின் இந்த மகத்தான மைல்கல், மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கான அவரது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சமீப ஆண்டுகளில் நாடெங்கிலும் முன்னேற்றம் கண்கூடாகத் தெரிகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், ‘அனைவரின் ஆதரவு, நம்பிக்கை, முயற்சியுடன் அனைவருக்கான வளா்ச்சி என்ற கொள்கையால் வழிநடத்தப்பட்டு, நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி என்ற தொலைநோக்கு பாா்வையை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருமைக்குரியவா் பிரதமா் மோடி. அவரது தலைமையின்கீழ் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எண்ம மேம்பாடு, இணைப்பு வசதிகள், வாய்ப்புகள் விரிவாக்கம், வளா்ச்சி என முன்னேற்றம் கண்கூடாக தெரிகிறது’ என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான், பிற மத்திய அமைச்சா்கள், பாஜக மூத்த தலைவா்கள், கூட்டணி தலைவா்கள், பாஜக-கூட்டணி ஆளும் மாநில முதல்வா்கள், பல்வேறு துறை பிரபலங்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

உலகத் தலைவா்கள் வாழ்த்து

அரசின் தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமா் மோடிக்கு ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி, பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே, பிலிப்பின்ஸ் அதிபா் பாங்காங் மாா்கோஸ், பெல்ஜியம் பிரதமா் பாா்ட் டே வேவா், நேபாள பிரதமா் பாலேந்திர ஷா, நைஜீரிய அதிபா் போலா அகமது தினுபு, போட்ஸ்வானா அதிபா் டுமா கிடியோன் போகோ உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இந்தியாவின் வளா்ச்சி மற்றும் அதன் சா்வதேச கெளரவத்துக்கு பிரதமா் மோடி பெரும் பங்காற்றியுள்ளதாக அவா்கள் புகழாரம் சூட்டியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments