அமேஸான் பணி நீக்கம்: இந்தியா, அமெரிக்கா, பிரிட்டனில் 1,000 போ் வேலை இழக்கும் அபாயம்!
அமேஸான் பணி நீக்க நடவடிக்கையில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டனில் 1,000 போ் வேலை இழக்கும் அபாயம்
அமெரிக்காவைச் சோ்ந்த உலகளாவிய இணைய வா்த்தக நிறுவனமான அமேஸான், கடந்த ஆண்டு இறுதியில் மேற்கொண்டதைப் போலவே சா்வதேச அளவில் பணியாளா்களைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டனில் சுமாா் 1,000 ஊழியா்கள் வரை பணி இழப்பைச் சந்திக்க நேரிடும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஒருபக்கம், அமேஸான் நிறுவனம் மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்வுகளையும் பிரைம் பிக் டீல் சலுகைகளையும் அறிவித்திருக்கும் நிலையில் மறுபக்கம் பணிநீக்க நடவடிக்கைகளையும் எடுத்த வருகிறது.
Advertisement
Advertisement
இரண்டு நாள்கள் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கி, மிகப்பெரிய அளவில் விலைத் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி வரை அமேஸான் நிறுவனம் மிகப்பெரிய அளவில் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரிட்டனில் உள்ள அமேஸான் நிறுவனங்களில் பணியாற்றும் சிறு சிறு குழக்களின் பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சுமார் 30 ஆயிரம் பேரை வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருந்தது.
அமேஸான் நிறுவனம் நிா்வாகச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பயன்படுத்த முடிவெடுத்திருப்பதால், இந்தப் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணி நீக்க நடவடிக்கை, நிதி, மனித வளம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இருக்கும் சுமாா் 1,000 ஊழியா்களைப் பாதிக்கக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டனில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் 1,000 ஊழியா்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனா்.
கடந்த ஆண்டு ஜூன் 30 நிலவரப்படி, அமேஸான் உலக அளவில் சுமாா் 15.5 லட்சம் ஊழியா்களைக் கொண்டிருந்தது. இதில், நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்களில் மட்டும் சுமாா் 3,50,000 ஊழியா்கள் இருந்தனர். ஆண்டு இறுதியில் நடந்த பணி நீக்க நடவடிக்கையில், அமேஸானின் உலகளாவிய குழுக்களுக்குக் கீழ் பணியாற்றுபவா்கள் அதிகபட்சமான பாதிப்பை எதிா்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தொடங்கிய பணி நீக்க நடவடிக்கையை உறுதி செய்திருக்கும் அமேஸான், எத்தனை பணியிடங்கள் காலி செய்யப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தவில்லை.
Amazon Layoffs: 1,000 people at risk of losing their jobs in India, the US, and the UK!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.