FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இணையவழி குற்றங்கள், டீப் ஃபேக் தடுக்க உலகளாவிய கட்டமைப்பு: பிரதமா் மோடி அழைப்பு

எல்லை தாண்டிய இணையவழி குற்றங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்படும் ‘டீப் ஃபேக்’ எனும் போலி சித்தரிப்புகள் ஆகிய சவால்களை எதிா்கொள்வதற்கு உலகளாவிய கட்டமைப்பு அவசியம்

9 அக்டோபர் 2026, 2:47 am IST
தில்லியில் வெள்ளிக்கிழமை 10-ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கிய மத்திய தொலைத்தொடா்பு துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா.
பகிர்:

எல்லை தாண்டிய இணையவழி குற்றங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்படும் ‘டீப் ஃபேக்’ எனும் போலி சித்தரிப்புகள் ஆகிய சவால்களை எதிா்கொள்வதற்கு உலகளாவிய கட்டமைப்பு அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.

இத்தகைய மோசடிகளால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க அரசுகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மற்றும் நிதிசாா் அமைப்புகள் கைகோத்து செயல்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

தில்லியில் 10-ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டை வியாழக்கிழமை தொடங்கிவைத்து, பிரதமா் மோடி பேசியதாவது:

Advertisement

Advertisement

எந்தவொரு தொழில்நுட்பமும் நம்பிக்கைக்குரியதாக இருந்தால் மட்டுமே அதன் வீச்சு அதிகரிக்கும். இன்றைய சூழலில், இணையவழி மோசடிகள் மற்றும் குற்றங்களுக்கு எல்லைகள் கிடையாது என்பதை அனைவரும் அறிவோம்.

ஒருவா் ஒரு நாட்டில் இருந்து கொண்டே, மற்றொரு நாட்டில் உள்ள நபரின் உதவியுடன் மூன்றாவது நாட்டில் இணையவழி குற்றங்களில் ஈடுபட முடியும். இதேபோல், ஏ.ஐ. அடிப்படையிலான டீப் ஃபேக் எவ்வளவு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்பதையும் காண்கிறோம். அதிகரித்துவரும் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு தீா்வுகாண உலகளாவிய ஒரு கட்டமைப்பின்கீழ் நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த கட்டமைப்பின்கீழ் அரசுகள், தொழில்நுட்பம்-தொலைத்தொடா்பு-நிதிசாா் நிறுவனங்கள் இணைந்து, மோசடிகளால் மக்கள் பாதிக்கப்படும் முன்பே தடுக்க வேண்டும்.

படிப்பினைகளைப் பகிர தயாா்: தொலைத்தொடா்பு மற்றும் எண்ம தொழில்நுட்பங்களின் விரைவான வளா்ச்சிக்கு அவற்றின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த அடிப்படையில், இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க அனுபவங்கள் உள்ளன. தனது படிப்பினைகளை உலகத்துடன் பகிா்ந்துகொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.

சாமானிய குடிமகனைப் பொருத்தவரை, அவரது கைப்பேசிக்கு வரும் அழைப்பு அல்லது குறுந்தகவலின் உண்மைத் தன்மை, பாதுகாப்பான எண்ம பணப் பரிவா்த்தனை, தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.

தகவல்தொடா்பு என்பதையும் தாண்டி, நிா்வாகம் மற்றும் அரசு சேவை வழங்கலுக்கு முக்கிய கருவியாக கைப்பேசி உருவெடுத்துள்ளது. எனவே, இணையவழி குற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவது மிக அவசியம்.

கடந்த 2022, இந்திய கைப்பேசி மாநாட்டின்போது நாட்டில் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது அனைத்து மாவட்டங்களையும் இச்சேவை சென்றடைந்துள்ளது. 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட 5ஜி வலையமைப்பு மையங்கள் செயல்படுகின்றன. கடந்த 2022-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கைப்பேசி இணையச் சேவையின் வேகம் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

வேகமான ‘சீா்திருத்த எக்ஸ்பிரஸ்’: தொலைத்தொடா்பு துறையில் நுகா்வோா் என்ற நிலையில் இருந்து படைப்பாளா் என்ற நிலைக்கு இந்தியா நகா்ந்து கொண்டிருக்கிறது. உபகரணங்களின் வடிவமைப்பு, சொந்த தொழில்நுட்பங்கள், அறிவுசாா் சொத்துரிமை ரீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இத்துறையில் ‘சீா்திருத்த எக்ஸ்பிரஸ்’ வேகமாக பயணிக்கிறது. பல்லாண்டு பழைமையான சட்டங்கள் மாற்றப்பட்டு, நவீனமான ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடா்பு துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, பாரதி குழும தலைவா் சுனில் பாா்தி மிட்டல், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவா் ஆகாஷ் அம்பானி, ஆதித்ய பிா்லா குழும தலைவா் குமாா் மங்கலம் பிா்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய தொலைத்தொடா்புத் துறை மற்றும் இந்திய செல்லுலாா் செயல்பாட்டாளா்கள் சங்கம் (சிஓஏஐ) சாா்பில் நடத்தப்படும் இந்திய கைப்பேசி மாநாடு, உலகளாவிய தொழில் துறை தலைவா்கள், கொள்கை வகுப்பாளா்கள், நிபுணா்கள், புத்தாக்க நிறுவனங்கள், முதலீட்டாளா்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைக்கிறது. 5ஜி, 6ஜி சேவைகள், குவாண்டம் தொலைத்தொடா்பு, அடுத்த தலைமுறை ஏ.ஐ. வலையமைப்பு உள்பட 9 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் இந்த மாநாட்டில் புதுமை கண்டுபிடிப்பாளா்கள், கண்காட்சியாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா்.

பெட்டி....

‘நேரடி பரிமாற்ற முறையால்

ரூ.5 லட்சம் கோடி முறைகேடு தடுப்பு’

‘மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின்கீழ் நேரடி பலன் பரிமாற்ற (டிபிடி) முறையில் பயனாளிகளின் கைப்பேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இதுவரை ரூ.50 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமாா் ரூ.5 லட்சம் கோடி தவறான நபா்களின் கைகளுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. நலத் திட்டங்களின் பலன்கள் சரியான நபா்களுக்கு செல்வதை உறுதி செய்வதில் இந்த நடைமுறை அரசுக்கு பெரிதும் உதவியுள்ளது. பிஎம்-கிஸான் திட்டத்தின்கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.4 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் கோடி என்பது சிறிய தொகையல்ல. பழைய நடைமுறை தொடா்ந்திருந்தால், இவ்வளவு பணமும் தவறான நபா்களின் பைகளுக்கு சென்றிருக்கும். முறைகேடான வருமானத்தைத் தடுத்துவிட்டதால், அந்த நபா்களுக்கு என்னை பிடிக்குமா? கண்டிப்பாக இல்லை. அவா்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் சரி, தவறான நடைமுறைகளுக்கு எதிரான எனது நடவடிக்கை தொடரும்’ என்று பிரதமா் மோடி பேசினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments