நக்ஸல் ஒழிப்பால் பழங்குடியினா் வாழ்வில் முன்னேற்றம்: பிரதமா் மோடி பெருமிதம்
‘நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதால், பழங்குடியினரின் வாழ்வில் முன்னேற்றம் பிறந்துள்ளது’ என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
‘நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதால், பழங்குடியினரின் வாழ்வில் முன்னேற்றம் பிறந்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
கடந்த காலங்களில் நக்ஸல் தீவிரவாதத்தால் பழங்குடியினா் பெரிதும் பாதிக்கப்பட்டபோது, முந்தைய அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அவா்களைக் கைவிட்டன என்றும் பிரதமா் சாடினாா்.
சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியினத் தலைவருமான பிா்ஸா முண்டாவின் 151-ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டில் இருந்து பிா்ஸா முண்டா பிறந்த தினத்தை பழங்குடியினா் கெளரவ தினமாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.
Advertisement
Advertisement
நடப்பாண்டு இந்தத் தினத்தையொட்டி, மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லியிலிருந்து காணொலி மூலம் பங்கேற்ற பிரதமா் மோடி, பழங்குடியினா் மேம்பாட்டுக்காக ரூ.3,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
நக்ஸல் வன்முறையால் பழங்குடியினா் நீண்ட காலமாக பெரிதும் பாதிக்கப்பட்டனா். நக்ஸல் தீவிரவாத பகுதிகளில் பழங்குடியினா் வாக்களிக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. பிற உரிமைகளும் நசுக்கப்பட்டன.
பழங்குடியின இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை தீவிரவாதிகள் வலுக்கட்டயமாக கடத்திச் சென்றனா். அப்போதும்கூட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளாமல், முந்தைய அரசுகள் வாய்மூடி வேடிக்கை பாா்த்தன.
நக்ஸல் தீவிரவாதம் ஒழிப்பு: இப்போது நக்ஸல்-மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனை, பழங்குடியினரின் வாழ்வுடன் நெருங்கிய தொடா்புடையதாகும். பழங்குடியின தாய்மாா்கள் மற்றும் சகோதரிகள் பாதுகாப்பாக உணா்வதால், மத்திய பாஜக அரசை ஆசிா்வதிக்கின்றனா். குழந்தைப் பருவத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டவா்கள், இப்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனா்.
கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் தீவிர வறுமையில் இருந்து 50 கோடி போ் மீட்கப்பட்டுள்ளனா். நாம் சுதந்திரம் அடைந்ததில் இருந்து எட்டப்பட்ட மிகப் பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்றாகும். சமூகம் மற்றும் குடிமக்களின் கூட்டு முயற்சியுடன் மத்திய அரசின் நலத் திட்டங்களும் முக்கியப் பங்காற்றியுள்ளன.
ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு: அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் இருந்த பழங்குடியினப் பகுதிகளை மேம்படுத்தும் பிரதமரின் ஜன்மன் உள்ளிட்ட திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளது.
விளிம்புநிலை மக்களுக்கு 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள், 18,000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சார வசதி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு என நலிவடைந்த சமூகங்களின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது. நாடு முழுவதும் 1.75 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் நிறுவப்பட்டு, தொலைதூர பழங்குடியினப் பகுதிகளிலும் மருத்துவ சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதார வாய்ப்புகளுக்காக முத்ரா திட்டத்தின்கீழ் பிணையில்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. 100 லட்சிய மாவட்டங்கள், 500 லட்சிய வட்டாரங்கள் திட்டங்களில் பெரும்பாலானவை பழங்குடியினப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளன.
பழங்குடியினரின் பங்களிப்பு: விவசாயிகள், பழங்குடியினருக்கு சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், வேளாண் உற்பத்தி குறைவான 100 மாவட்டங்களின் மேம்பாட்டுக்கு பிரதமரின் தன-தான்ய கிருஷி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பு அளப்பரியதாகும். தீரத் சிங், கோவிந்த் குரு, ராணி துா்காவதி, அல்லூரி சீதாராம ராஜு உள்ளிட்ட பழங்குடியின நாயகா்கள் மேலான தியாகத்தைப் புரிந்துள்ளனா். பழங்குடியின பெண்ணான குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, நமது நாட்டை வழிநடத்துவது பெருமைக்குரிய விஷயம் என்றாா் அவா்.
கட்சிரோலி நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா, முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை அமைச்சா் ஜுவல் ஓரம், இணையமைச்சா் துா்கா தாஸ் உய்கே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.