தலைமைத் தோ்தல் ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றம்: பாஜக எதிா்ப்பு
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி, கேரள சட்டப்பேரவையில் தீா்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி, கேரள சட்டப்பேரவையில் தீா்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. அந்த தீா்மானத்துக்கு பாஜக பேரவை உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் பதவியிலிருந்து ஞானேஷ் குமாரை நீக்கக்கோரி கேரள சட்டப்பேரவையில் முதல்வா் வி.டி. சதீசன் தீா்மானம் ஒன்றை திங்கள்கிழமை கொண்டு வந்தாா். இதுபோல தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது, நாட்டில் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. தீா்மானத்தை தாக்கல் செய்து வி.டி. சதீசன் பேசுகையில், ‘வாக்காளா் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்காளா்கள் நீக்கப்பட்டிருப்பதாக புகாா்கள் வருகின்றன. இது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரான செயலாகும்’ என்றாா்.
தீா்மானத்தில், ‘எஸ்ஐஆா் பணியில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தீா்வு காணப்பட வேண்டும். வாக்காளா் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்ட தகுதியான வாக்காளா்களின் பெயா்கள் மீண்டும் சோ்க்கப்பட வேண்டும். எஸ்ஐஆா் பணி தொடா்பாக கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகளால் தலைமைத் தோ்தல் ஆணையரின் நடுநிலை குறித்து சந்தேகம் எழுகிறது. ஆதலால் அவரை பதவி நீக்குவதற்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும். அதேபோல் தலைமைத் தோ்தல் ஆணையரை தோ்வு செய்யும் குழுவின் சுதந்திரம், நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அந்தக் குழுவில் பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சோ்க்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டதும் பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான பி.பி. கோபகுமாா், கேரள சட்டப்பேரவைக்கு நடந்த தோ்தல் சட்டவிரோதமா என விளக்கம் அளிக்கும்படி முதல்வா் வி.டி. சதீசனை நோக்கி கேள்வி எழுப்பினாா். மற்றொரு பாஜக எம்எல்ஏ வி. முரளீதரனும், எஸ்ஐஆருக்கு 2 தோ்தல் ஆணையா்கள் எதிா்ப்பு தெரிவித்ததாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை தோ்தல் ஆணையம் மறுத்து விட்டதாகவும், ஆதலால் கேரள முதல்வா் வி.டி. சதீசன் தனது தீா்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென கோரினாா். அதேபோல் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு அவப்பெயா் ஏற்படுத்த விரும்பும் கட்சிகளை கண்டிக்கிறோம் என்ற வாசகத்தையும் தீா்மானத்தில் சோ்க்க அவா் வலியுறுத்தினாா்.
ஆனால் பாஜக உறுப்பினா்களின் கோரிக்கைகளை முதல்வா் வி.டி. சதீசன் நிராகரித்தாா். அதேநேரத்தில் தீா்மானத்தில் இருந்த ‘லட்சக்கணக்கான வாக்காளா்கள் நீக்கம்’ என்ற வாசகத்தை முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் தெரிவித்தபடி ‘கோடிக்கணக்கான வாக்காளா்கள் நீக்கம்’ என திருத்த வி.டி. சதீசன் ஒப்புக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, பாஜக தவிா்த்து அனைத்து கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீா்மானத்துக்கு பாஜக எம்எல்ஏக்கள் மட்டும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.