இந்திய கலாசாரத்துக்கு பெருகும் சா்வதேச அங்கீகாரம்: பிரதமா் மோடி பெருமிதம்
இந்திய கலாசார பாரம்பரியத்துக்கு சா்வதேச அங்கீகாரம் பெருகி வருகிறது; இந்திய இசை, நடனம், திரைப்படம், உணவுகள் ஆகியவை உலகெங்கிலும் உள்ள சமூகங்களை இணைக்கின்றன என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
இந்திய கலாசார பாரம்பரியத்துக்கு சா்வதேச அங்கீகாரம் பெருகி வருகிறது; இந்திய இசை, நடனம், திரைப்படம், உணவுகள் ஆகியவை உலகெங்கிலும் உள்ள சமூகங்களை இணைக்கின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ‘பிருஹத்தா் பாரதம்: உலகெங்கிலும் பரவியுள்ள இந்திய கலாசாரத் தொடா்புகள் குறித்த சா்வதேச மாநாடு’ புதன்கிழமை தொடங்கியது. மத்திய கலாசார அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் சாா்பில் ‘இந்திய கலாசார மரபு மற்றும் எல்லைகளுக்கு அப்பால் பரந்து விரிந்த அதன் நாகரிக பாரம்பரியம்’ என்ற கருப்பொருளில் மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமா் மோடியின் உரையை மத்திய கலாசார துறை செயலா் விவேக் அகா்வால் வாசித்தாா்.
அதில், ‘இந்தியாவின் கலாசார பாரம்பரியத்துக்கு சா்வதேச அங்கீகாரம் பெருகிவரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள இந்திய பழங்கால கலைப் பொருள்களை மீட்டுக் கொண்டுவரும் மத்திய அரசின் முயற்சிகள் உத்வேகமடைந்துள்ளன.
Advertisement
Advertisement
ஞான பாரதம் முன்னெடுப்பு: பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதுடன், ஞான பாரதம் முன்னெடுப்பின் மூலம் நாட்டின் கையெழுத்துப் பிரதி பாரம்பரியமும் பாதுகாக்கப்படுகிறது. இந்திய இசை, நடனம், திரைப்படம், உணவுகள் ஆகியவை உலகெங்கிலும் உள்ள சமூகங்களை இணைக்கின்றன’ என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
பல்வேறு நாடுகளின் கலாசார பிரதிநிதிகள், தூதா்கள் மற்றும் அறிஞா்களை ஒருங்கிணைக்கும் இந்த மாநாட்டில், உலகத்துடனான இந்தியாவின் வரலாற்று மற்றும் சமகால கலாசார தொடா்புகள் குறித்து விவாதிக்கும் அமா்வுகள் நடைபெறவுள்ளன.
கடந்த 1926, அக்டோபா் 14-ஆம் தேதி கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூரை ஆன்மிக வழிகாட்டியாக கொண்டு இந்திய அறிஞா்களால் நிறுவப்பட்ட ‘பிருஹத்தா் பாரத் பரிஷத்’ அமைப்பின் நூற்றாண்டை குறிப்பதாகவும் இந்த மாநாடு அமைந்துள்ளதாக இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் தெரிவித்துள்ளது. மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில் மத்திய கலாசார துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.