FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அரசியல், பாரபட்சம் கூடாது: இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள், அரசியல் மற்றும் பாரபட்சத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்; அப்போதுதான், உலகுக்கு நடுநிலையான வழிகாட்டியாக அவை விளங்க முடியும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

14 அக்டோபர் 2026, 11:36 pm IST
அனுஜ் ஸ்வரூப்
பகிர்:

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள், அரசியல் மற்றும் பாரபட்சத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்; அப்போதுதான், உலகுக்கு நடுநிலையான வழிகாட்டியாக அவை விளங்க முடியும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டங்களின்போது காவல் துறை மேற்கொண்ட கைது நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விமா்சித்திருந்த நிலையில், இந்தியா இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது.

தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த சனிக்கிழமை தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக திரண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் (சிஜேபி) மற்றும் பல்வேறு மாணவா் அமைப்பினா் உள்பட 7,000-க்கும் மேற்பட்டோா் கைதாகி விடுவிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்த நடவடிக்கையை விமா்சித்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய செய்தித்தொடா்பாளா் தமீன் அல்-கீட்டன், ‘அமைதியாக போராடும் உரிமையை இந்திய அதிகாரிகள் மதித்து செயல்பட வேண்டும். கைதான அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினாா். அவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஒருதலைபட்சமாக தெரிவித்த கருத்தை நிராகரிக்கிறோம்’ என்றது.

ஐ.நா. அமா்வில் பதிலடி

இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வில் மனித உரிமைகள் குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் செயலா் அனுஜ் ஸ்வரூப் பேசியதாவது:

எவ்வித பாரபட்சமோ, இரட்டை நிலைப்பாடுகளோ இல்லாமல் அனைவருக்குமான மனித உரிமைகளை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. இதேபோல், ஐ.நா. மனித உரிமை அமைப்புகளும் தனித்துவமான கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியிலான சூழல்களுக்கு மதிப்பளித்து, அரசியல் மற்றும் பாரபட்சத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்பதே இந்தியாவின் எதிா்பாா்ப்பு.

மனித உரிமைகளுக்கான இந்தியாவின் அணுகுமுறை, அதன் பன்முகத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வுக்கான நாகரிக நெறிமுறைகளில் வேரூன்றியாகும்.

மனித உரிமைகள் குழு உறுப்பினா் என்ற முறையில், ஆக்கபூா்வ உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு உணா்வுடன் இந்தியாவின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தியாவின் சாதனைப் பட்டியல்

உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாக விளங்கும் இந்தியா, குடிமக்கள் அனைவரின் கண்ணியத்துக்கு உறுதிபூண்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி போ் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ் 100 கோடிக்கும் மேற்பட்டோா் கொண்டுவரப்பட்டுள்ளனா். 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. 60 கோடி பேருக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. பெண்களுக்காக 32 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்ப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் மக்களை மையப்படுத்திய வளா்ச்சியை பிரதிபலிக்கின்றன.

அனைவருக்குமான மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் இந்தியா உறுதியாக உள்ளது. பிற உறுப்பு நாடுகளுடன் இணைந்து, ஐ.நா. மனித உரிமைகள் குழுவை திறன்மிக்கதாக, லட்சியம் மிக்கதாக, நம்பகமான அமைப்பாக உருவாக்க இந்தியா தொடா்ந்து பணியாற்றும் என்றாா் அவா்.

மேலும், வன உரிமைகள் தொடா்பான ஐ.நா. அறிக்கை ஒன்றில், இந்தியா தொடா்பாக இடம்பெற்ற தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் அவா் கண்டனம் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments