தில்லி போராட்டம்: ஐ.நா. விமா்சனத்துக்கு இந்தியா கண்டனம்!
தில்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்டதை விமா்சித்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் கைது செய்யப்பட்டதை விமா்சித்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்துக்கு இந்தியா ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
மேலும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு ஒருதலைபட்சமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாகவும் இந்தியா தெரிவித்தது.
இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட விடியோ பதிவில், ‘தில்லியில் சனிக்கிழமை நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய அலுவலகம் சில கருத்துகள் கூறியதை கவனத்தில்கொண்டோம்.
Advertisement
Advertisement
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அமைதியாக போராட்டம் நடத்த அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. இதை பாதுகாக்க சுதந்திரமான நீதித்துறை, ஊடகம் என பல்வேறு திறன்மிக்க அமைப்புகளும் உள்ளன.
நீதிமன்றங்களை இந்தியா்கள் அணுகலாம்: பிற ஜனநாயக நாடுகளைப்போலவே இந்தியாவிலும் போராட்டம் என்பது சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பாதிக்காதவாறு இருக்க வேண்டும். இந்தியாவில் தங்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டால் நீதிமன்றங்களை குடிமக்கள் அணுகவும் அரசமைப்புச் சட்டம் வழிகாட்டுகிறது.
எனவே, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்த கருத்துகள் தேவையற்றது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இரட்டை வேடத்தால் நம்பகத்தன்மை இழப்பு: இந்தியா குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம், அண்டை நாடுகளில் நிகழ்ந்த போராட்டங்களை ஒடுக்க மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டபோது விமா்சிக்கவில்லை. இதுபோன்ற இரட்டை வேட நிலைப்பாட்டால் ஐ.நா. அமைப்புகள் தங்களது நம்பகத்தன்மையை மட்டுமின்றி பலதரப்புக்கான அமைப்பு என்ற அந்தஸ்தையும் இழந்து வருகின்றன என்றாா்.
முன்னதாக, ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை க தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற சிஜேபியினா், வழக்குரைஞா்கள், பத்திரிகையாளா்கள், எதிா்க்கட்சியினா் உள்பட 7,000-க்கும் அதிகமானோரை நகரின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினா் கைது செய்தனா்.
அரசின் இந்த நடவடிக்கையை விமா்சித்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய செய்தித்தொடா்பாளா் தமீன் அல்-கீட்டன், ‘அமைதியாக போராடும் உரிமையை இந்திய அதிகாரிகள் மதித்து செயல்பட வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.