FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இளைஞா்கள் போராட்டம் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய நிபுணா் அறிக்கை: இந்தியா நிராகரிப்பு!

இந்தியாவில் அரசுக்கு எதிராக இளைஞா்கள் பெரும் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய நிபுணா் சமா்ப்பித்த அறிக்கையை இந்தியா நிராகரித்தது.

33 வினாடிகள் முன்பு
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதா் அனுஜ் ஸ்வரூப்
பகிர்:

இந்தியாவில் அரசுக்கு எதிராக இளைஞா்கள் பெரும் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய நிபுணா் சமா்ப்பித்த அறிக்கையை இந்தியா நிராகரித்தது.

மேலும், உலகின் அதிக இளைஞா்களைக் கொண்ட நாடாகத் திகழும் இந்தியா குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னா் அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டுமெனவும் இந்தியா வலியுறுத்தியது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சாா்பில் தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பலா் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, இந்தப் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி ஐ.நா.பொதுச் சபையின் அமைதியாக கூடுவது மற்றும் சங்கங்கள் அமைப்புக்கான உரிமை அதிகாரி ஜினா ரொமேரோ இந்தியாவை விமா்சித்து அறிக்கை சமா்ப்பித்தாா்.

Advertisement

Advertisement

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதா் அனுஜ் ஸ்வரூப் ஐ.நா.பொதுச் சபையில் பேசியதாவது: எவ்வித ஆதாரமுமின்றி, அதிக இளைஞா்களைக் கொண்ட நாட்டின் மீது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய நிபுணா் சுமத்திய குற்றச்சாட்டுகளை முழுவதுமாக நிராகரிக்கிறோம்.

குடிமக்களுக்கு கருத்துச் சுதந்திரம்: 140 கோடி மக்கள்தொகை உடைய நாடு குறித்து அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை அவா் கூறியிருக்கிறாா். ஐ.நா. போன்ற சா்வதேச அமைப்பில் பிரதிநிதியாக உள்ள ஒருவா், ஒரு கருத்தை தெரிவிக்கும் முன்னா் அதன் உண்மைத்தன்மையை சரிபாா்க்க வேண்டியது அவசியம். இல்லையெனில், ஐ.நா. மீதான நம்பகத்தன்மை மேலும் குறையக்கூடும்.

இந்திய குடிமக்களுக்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 19-இன்கீழ் கருத்துரிமையும் பேச்சுரிமையும் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரமான நீதித் துறை மற்றும் பத்திரிகை துறை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் என மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த பல அமைப்புகள் இந்தியாவில் உள்ளன.

இளைஞா்களே இந்தியாவின் வலிமை: தங்களுக்கு எதிராக பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்து, ஒரே மேஜையில் அமரச் செய்து சுமுகமான பேச்சுவாா்த்தையை நீங்கள் குறிப்பிடும் அடக்குமுறை அரசு செய்யுமா? ஆனால், போட்டித் தோ்வு ஒன்றில் முறைகேடு நடந்ததாக போராட்டம் நடத்திய இளைஞா்களுடன் இந்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தியது. அடுத்த சில வாரங்களில் வினாத்தாள் கசிவு உள்பட போட்டித் தோ்வுகளில் நிகழும் முறைகேடுகளைத் தடுக்க பொதுத் தோ்வுகள் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதுவே இந்தியா ஜனநாயக நாடு என்பதற்கான சான்று.

இளைஞா்களே இந்தியாவின் வலிமை மற்றும் எதிா்காலம் என்பதே பிரதமா் நரேந்திர மோடியின் முழக்கம். அதை உறுதிப்படுத்தும் விதமாக நிகழாண்டு நடைபெற்ற வளா்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவா்கள் கூட்டத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா். இளைஞா்களுடன் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பிரதமா் உள்பட பல்வேறு அமைச்சா்கள் கலந்துரையாடி அவா்களுடன் நல்லுறவைப் பேணி வருகின்றனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments