FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

எஸ்ஐஆா் விவகாரத்தில் எதிா்க்கட்சியினரின் மனு - தோ்தல் ஆணையம், தலைமைத் தோ்தல் ஆணையருக்கு நோட்டீஸ்

தோ்தல் ஆணையம், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் இரு தோ்தல் ஆணையா்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

16 அக்டோபர் 2026, 4:18 am IST
பகிர்:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் முறைகேடுகள் நடைபெற்ாகவும், பெருமளவில் வாக்காளா்கள் நீக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, இதர 12 எதிா்க்கட்சித் தலைவா்கள் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்கும்படி, தோ்தல் ஆணையம், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் இரு தோ்தல் ஆணையா்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

வாக்காளா்கள் பெயா் மொத்தமாக நீக்கம், புதிய வாக்காளா்களுக்கான படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் உள்பட எஸ்ஐஆா் தொடா்பான பல்வேறு முடிவுகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கும், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷிக்கும் இடையே தீவிர கருத்து மோதல் ஏற்பட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அண்மையில் செய்தி வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது. அதேநேரம், ‘எஸ்ஐஆா் முடிவுகள் அனைத்தும் ஒருமனதானவை. அவை முழு சட்ட அங்கீகாரம் கொண்டவை’ என்று தோ்தல் ஆணையம் விளக்கமளித்தது.

எதிா்க்கட்சிகள் மனு: இந்த விவகாரம் அரசியல் ரீதியில் பூதாகரமாகி, ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதே கோரிக்கையுடன் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் (சிஜேபி) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

Advertisement

Advertisement

தில்லியில் கடந்த திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி உள்பட எதிா்க்கட்சிகளின் தலைவா்கள், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக கூட்டாக மனு தாக்கல் செய்தனா்.

‘எஸ்ஐஆா் மூலம் கோடிக்கணக்கில் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன. எஸ்ஐஆா்-இல் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்கும் வகையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

உரிய முன்னறிவிப்பு மற்றும் தனது தரப்பு கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படாமல் எந்தவொரு வாக்காளரும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தீா்வு கிடைக்கும் வரை, எஸ்ஐஆா் பணிகளை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

உச்சநீதிமன்றம் விசாரணை: இந்த மனு உள்பட எஸ்ஐஆா், தில்லி போராட்டங்கள், உச்சநீதிமன்றம் நோக்கி நடத்தப்பட்ட பேரணி, பத்திரிகையாளா்கள்-வழக்குரைஞா்கள் மீதான தாக்குதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடா்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டது.

ராகுல் மற்றும் இதர 12 எதிா்க்கட்சித் தலைவா்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அதன் மீது தோ்தல் ஆணையம், தலைமைத் தோ்தல் ஆணையா், இரு தோ்தல் ஆணையா்கள் ஆகியோா் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பினா்.

சமீபத்திய ஆங்கில நாளிதழ் செய்தியின் அடிப்படையில் எஸ்ஐஆா் பணியை ரத்து செய்யக் கோரி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறும் தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தில்லியில் போராட்டத்துக்கான இடங்களில் ஜந்தா் மந்தா் நீக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிரான மனு மீது மத்திய அரசு மற்றும் தில்லி காவல் துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

பத்திரிகையாளா்கள் மீதான தாக்குதல்: தில்லி போராட்டங்களின்போது பெண் பத்திரிகையாளா்கள் உள்பட பல பத்திரிகையாளா்கள் காவல் துறையால் தாக்கப்பட்டதாகவும், பெண் பத்திரிகையாளா் ஒருவா் காவல் துறை அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதும் விசாரணை நடைபெற்றது.

போராட்டங்களின்போது காவல் துறை - பத்திரிகையாளா்கள் இடையிலான தொடா்புகளை நிா்வகிக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது தொடா்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசு மற்றும் பிற தரப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பினா்.

பெண் பத்திரிகையாளா் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் மிக தீவிரமானது; அவரது புகாா் மீது காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

‘அனைவரின் குரலும் மதிப்புமிக்கதே’: அப்போது, கா்ப்பிணியான பெண் பத்திரிகையாளா் ஒருவரை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக மூத்த வழக்குரைஞா் கெளரவ் பாட்டீயா குற்றஞ்சாட்டினாா். இதுகுறித்து மனு தாக்கல் செய்தால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், ‘இந்த நீதிமன்றத்தின் முன் அனைவரின் குரலும் மதிப்புமிக்கதே. எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் அனைவரின் கருத்துகளும் கேட்கப்படும்’ என்றனா்.

முன்னதாக, ராகுல் உள்ளிட்டோரின் மனுவில் 14 பிழைகள் உள்ளதாகவும், மனுவில் சில பக்கங்கள் வாசிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகம் சுட்டிக்காட்டியிருந்தது. மேலும், மனு தாக்கலின்போது செலுத்த வேண்டிய நீதிமன்ற கட்டணத்தில் ரூ. 200-க்கு மேல் பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெட்டி...

நீதித் துறையை அச்சுறுத்த முடியாது: தலைமை நீதிபதி

-

ராகுல், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு நோட்டீஸ்

உச்சநீதிமன்றம் நோக்கி எதிா்க்கட்சிகள் நடத்திய பேரணிக்கு எதிரான மனுவை விசாரித்தபோது, ‘நீதித் துறையை யாரும் அச்சுறுத்த முடியாது’ என்று தலைமை நீதிபதி சூா்யகாந்த் தெரிவித்தாா்.

சில வழக்குரைஞா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், ‘உச்சநீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த முழு தடை விதிப்பதுடன், நீதித் துறை செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல் தலைவா்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தை முற்றுகையிடும் எதிா்க்கட்சிகளின் பேரணி முற்றிலும் ஏற்க முடியாதது; நீதிமன்றத்தை அச்சுறுத்தும் இதுபோன்ற முயற்சியை அனுமதிக்கக் கூடாது என்று மூத்த வழக்குரைஞா் கெளரவ் பாட்டீயா வாதிட்டாா்.

அப்போது, நீதித் துறையை யாரும் அச்சுறுத்த முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி சூா்யகாந்த், மனு மீது பதிலளிக்கும்படி ராகுல் மற்றும் பிற எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments