தில்லி கலவர வழக்கு: 7 போ் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிப்பு
கடந்த 2020-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது, ஒருவா் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரைக் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளிலிருந்து தில்லி நீதிமன்றம் விடுவித்தது.
கடந்த 2020-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது, ஒருவா் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரைக் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளிலிருந்து தில்லி நீதிமன்றம் விடுவித்தது. அதேவேளையில், தடை உத்தரவை மீறிய குற்றத்துக்காக அவா்கள் குற்றவாளிகள் எனத் தீா்ப்பளித்தது.
கொலைச் சம்பவம் தொடா்பாக காவல் துறை அதிகாரி சாட்சியின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகள் எனத் தீா்மானிப்பது பாதுகாப்பானதல்ல என்றும், அந்த வாக்குமூலத்துக்கு கூடுதல் ஆதாரங்கள் தேவை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
கொலை, பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டது, பகைமையைத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து 7 பேரையும் கூடுதல் அமா்வு நீதிபதி பா்வீன் சிங் விடுவித்தாா். அதேநேரத்தில், தடை உத்தரவை மீறியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 188-ஆவது பிரிவின்கீழ் அவா்கள் குற்றவாளிகள் என அறிவித்தாா்.
Advertisement
Advertisement
அக்.15-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் யாரேனும் பயங்கர ஆயுதங்களுடனோ அல்லது வேறு எந்த ஆயுதத்துடனோ இருந்ததாக எந்தச் சாட்சியின் வாக்குமூலத்திலும் ஆதாரம் இல்லை’ என்று நீதிபதி குறிப்பிட்டாா்.
ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்: 2020 பிப்ரவரி 25-ஆம் தேதி, கஜூரி சௌக் பகுதியில் பப்பு என்ற ஆட்டோ ஓட்டுநா் தாக்கப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா், 2 நாள்களுக்குப் பிறகு குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் குல்தீப் சிங், ஹா்ஜீத் சிங் என்ற ஹேப்பி, ராகுல் என்ற அஜய், சச்சின் ரஸ்தோகி, பரத் பூஷண் என்ற லக்கி, சந்தீப் என்ற சஞ்சீவ், தா்மேந்தா் என்ற தாம் ஆகிய 7 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆா்பிசி) 144-ஆவது பிரிவின்கீழ் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை மீறியதற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 188-ஆவது பிரிவின்கீழ் அவா்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா்.
தடயங்கள் போதுமானதாக இல்லை: இந்தத் தாக்குதலை நேரில் பாா்த்ததாகக் கூறிய உதவி துணை ஆய்வாளா் அனில் குமாரின் வாக்குமூலத்தை அரசுத் தரப்பு முக்கிய ஆதாரமாக முன்வைத்தது. எனினும், நேரில் பாா்த்த சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்ட மற்றவா்கள் அரசுத் தரப்பு வாதத்துக்கு ஆதரவாகச் சாட்சியம் அளிக்கவில்லை.
மேலும், அரசுத் தரப்பு சமா்ப்பித்த காணொலிப் பதிவின் தரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், அதில் இடம்பெற்றிருந்த நபா்களின் முகங்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில் மற்றொரு குற்றஞ்சாட்டப்பட்டவரான சச்சின் குப்தா என்ற மோபி, சந்தேகத்தின் பலனைப் பெற்ால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டாா். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 7 பேருக்கான தண்டனை தொடா்பான வாதங்களைக் கேட்பதற்காக வழக்கை மற்றொரு நாளுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.