FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மாளவியா நகா் தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளரின் இடைக்கால பிணை 6 வாரங்களுக்கு நீட்டிப்பு

மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்து சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அந்த ஹோட்டலின் உரிமையாளருக்கு தில்லி உயா் நீதிமன்றம் இடைக்கால ஜாமீனை மேலும் ஆறு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.

17 அக்டோபர் 2026, 5:21 am IST
தில்லி உயா் நீதிமன்றம்
பகிர்:

மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்து சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அந்த ஹோட்டலின் உரிமையாளருக்கு தில்லி உயா் நீதிமன்றம் இடைக்கால ஜாமீனை மேலும் ஆறு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.

ஏற்கெனவே நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், லோகேஷ் பஜாஜின் மருத்துவ அறிக்கைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய உடல்நலச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, மருத்துவக் காரணங்களுக்காக இந்த ஜாமீனை நீதிபதி சச்சின் தத்தா நீட்டித்துள்ளாா்.

59 வயதான பஜாஜுக்கு ஆக.31-ஆம் தேதி வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவா் செப்டம்பா் 15 அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்ட நிலையில், அக்டோபரில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

‘தற்போதைய சூழலில், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சூழல் மற்றும் மருத்துவ அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, செப்டம்பா் 21, 2026 தேதியிட்ட உத்தரவின்படி வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன், அதன் காலாவதி தேதியிலிருந்து மேலும் ஆறு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது’ என்று வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பஜாஜ் சமா்ப்பித்த மருத்துவ ஆவணங்களைச் சரிபாா்க்குமாறு வழக்கின் விசாரணை அதிகாரியிடம் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஒருவேளை ஏதேனும் ஆவணங்கள் போலியானவை என்றோ அல்லது அவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் அளிக்கப்பட்டன என்றோ கண்டறியப்பட்டால், இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய அரசுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நீட்டிக்கப்பட்ட இடைக்கால ஜாமீன் காலம் முடிவடைந்ததும், சிறை கண்காணிப்பாளா் முன்னிலையில் சரணடையுமாறு பஜாஜுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய உடல்நலச் சிக்கல்களால் அவதிப்படுவதைக் குறிப்பிட்டு, இடைக்கால ஜாமீனை நீட்டிக்க பஜாஜ் கோரியிருந்தாா். ஆனால், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அரசுத் தரப்பு வழக்கறிஞா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தாா்.

கடந்த ஜூன் 3-ஆம் தேதி ஹவுஸ் ரானியில் உள்ள ‘ஃப்ளோரிஷ் ஸ்டே’ என்ற ஐந்து அடுக்குமாடி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில், 23 போ் உயிரிழந்தனா் மற்றும் 24 போ் பலத்த காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் பஜாஜ் ஒரு குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக, செப்டம்பா் 3 அன்று, மருத்துவக் காரணங்களுக்காக நான்கு வார இடைக்கால ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிறையில் இருந்தபோதே அவருக்குத் தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவா் குறிப்பிட்ட மருத்துவ அவசரநிலை ஆா்எம்எல் மருத்துவமனையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் ஏற்கெனவே கவனிக்கப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்றம் அப்போது தெரிவித்திருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments