FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் பதில்...

16 அக்டோபர் 2026, 11:08 am IST
எலான் மஸ்க் | முகேஷ் அம்பானி - கோப்புப் படம்
பகிர்:

ஒருபோதும் போட்டியைக் கண்டு அஞ்சியதில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் மொபைல்போன் சிக்னல் இல்லாத இடங்களுக்கும் செயற்கைகோள் வாயிலாக இணையதள சேவைகளை வழங்கி வருகிறது.

இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு முதல்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை விரைவாக முடிக்கும் பணியில் ஸ்டார்லிங்க் ஈடுபட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் திட்டத்தை பெரும் செல்வந்தர்கள் தடுப்பதாக முதலில் குற்றம்சாட்டிய எலான் மஸ்க், பின்னர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை நேரடியாகக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், ”அன்புக்குரிய பிரதமர் அம்பானி, நீங்கள்தான் இந்தியாவின் உண்மையான தலைவர் என்பதை உணராமல் இருந்ததற்காக என்னுடைய மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்திய மக்கள் மீது, உங்களது ஏகபோக சுரண்டலை மேற்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள், இருப்பினும், ஸ்டார்லிங்க் (Starlink) போட்டியிட அனுமதிப்பது குறித்து நீங்கள் பரிசீலிப்பீர்களா?” என்று சர்ச்சைக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரத்துக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை” என்று விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் வெள்ளிக்கிழமை காலை ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“ரிலையன்ஸ் மற்றும் இந்தியச் சந்தை குறித்து சமீபத்தில் கருத்துகள் எழுந்தன. அதுதொடர்பான உண்மைகளைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து நிறுவனங்களைப் போலவே, ரிலையன்ஸும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் முதலீடுகளையும் புத்தாக்கங்களையும் (உள்நாட்டு அல்லது சர்வதேச) வரவேற்கிறது.

இந்திய அரசு குறிப்பிட்டபடி, இந்திய நிறுவனமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒரே நடைமுறையே பின்பற்றப்படுகிறது. ஜியோவின் செயற்கைக்கோள் சேவைகளுக்கான அனுமதிகளும் இன்னும் நிலுவையில் உள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனம் ஒருபோதும் போட்டியைக்கண்டு அஞ்சியதில்லை. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை யார் வழங்குகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான உண்மையான அளவுகோலாகவே நாங்கள் போட்டியைப் பார்க்கிறோம்.

2016-ல், மிகுந்த போட்டி நிறைந்த இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில், ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாத நிலையில், புதிய நிறுவனமாகவே ஜியோ களமிறங்கியது. வெறும் பத்து ஆண்டுகளில், 53 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஜியோ, இந்தியர்களுக்கு உலகின் மிகச்சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பையும், மிகவும் மலிவான விலையில் தரவுச் சேவையையும் வழங்குகிறது.

ஸ்டார்லிங்க் உள்பட செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் துறையில் நிலவும் போட்டியை நாங்கள் வரவேற்கிறோம். ஜியோ உள்பட அனைத்து நிறுவனங்களும் இந்திய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்; அதே சமயம், இந்தியாவின் சட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் உட்பட்டுச் செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

summary

We have never feared - Ready to compete with Starlink – Reliance statement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments